அது ஒரு ஆடிமாதம், இன்று வீராணம் என்று அழைக்கப்படும், வீரநாராயண ஏரிக்கரையில் தனது குதிரையை செலுத்துகிறான் வல்லவரையர் வந்தியத்தேவன். இதுதான் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தொடக்கம்.
பொன்னியின் செல்வன் என்று சொன்னதுமே அதை படித்தவர்களுக்கு பாத்திரங்களின் நினைவு வந்திருக்கும். அனைவரும் வாசித்து அனுபவிக்க வேண்டிய நூல் இது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.
அச்சரித்திர நாவலை என்று வாசித்து முடித்தேனோ, அன்றிலிருந்து பழுவேட்டரையரும், கடம்பூர் சம்புவரையரும், வந்தியதேவனும், அருள்மொழி வர்மனும், ஆதித்த கரிகாலனும், கந்தமாறனும், பார்த்திபேந்திரனும், தாத்தா மலையமானும், சுந்தர சோழரும், ஊமைராணி மந்தாகினியும், இளையபிராட்டி குந்தவியும், அழகு மோகினி நந்தினியும், உன்னத காதல்கொண்ட மணிமேகலையும், அமுதனும், பூங்குழலியும், வானதியும், ஆழ்வார்கடியானும், மந்திரி அநிருத்தரும் இப்படி ஏதோ ஒரு பாத்திரங்கள் அவ்வப்போது என் நினைவுகளில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. இது தமிழர்களின் சோழ வரலாற்றின் உண்மைச்சம்பவங்களை கொண்டு புனைந்து எழுதப்பட்ட சரித்திர கதை என்பதால், பேசுவதற்கும் தெரிந்துகொள்வதற்கும் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
சாதாரணமாகவோ, கடுமையாகவோ விவாதிக்கும்போது எடுத்துக்காட்டு சம்பவங்களாக நமக்குத் தேவையான நிறைய வரலாற்றுச் சான்றுகள் இந்த நூல் முழுக்க விரவி கிடக்கிறது. ஆனாலும் இதை வெறும் கதையாக மட்டும் நினைத்து படிப்பவர்களுக்கு அத்தனை பயனுள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை என்றாலும் கூட, தமிழனின் சோழ வரலாற்றினை மனதில் கொண்டு வாசிப்பவர்களுக்கு நல்லத் தீனிதான் இந்த பொன்னியின் செல்வன்.
தஞ்சை, செந்தலை, பழையாறை, நார்த்தாமலை, கொடும்பாளூர், உறையூர், ஈழம், குடந்தை, நாகப்பட்டினம், காஞ்சி, கடம்பூர் இவைகள் எல்லாம் அப்பொழுது எப்படி செழித்து இருந்தன என்று நினைக்கும்போது மகிழ்ச்சி வந்த அடுத்தகணம், தற்பொழுதைய நினைவு வந்து நெஞ்சை பிளக்கிறது.
ராஜசிம்மன் என்ற பாண்டிய மன்னன், சோழர்களின் நெருக்கடிகளுக்கு பயந்துகொண்டு தனது அரச மணிமுடியை இலங்கை நாட்டு மன்னனிடம் அடைக்கலம் கொடுத்து வைக்கிறான். ஒரு தமிழனின் மணிமுடி வேறு ஒருவனிடம் இருப்பது பேரவமானம் என்று கருதிய சுந்தர சோழன் தனது மகன் அருள்மொழி வர்மன் தலைமையில் படைகளை இலங்கைக்கு அனுப்பி மணிமுடியை மீட்டுவர சொல்கிறான். இந்த அருள்மொழி வர்மந்தான் பொன்னியின் செல்வன் என்று கூறப்படுகிறவன்.
பாண்டியன் தனது மணிமுடியை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு போகட்டுமே அதை ஏன் சோழன் அவமானமாக கருத வேண்டும்? இங்குதான் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான தீராப் பகையை நம்மால் உணர முடிகிறது.
பல நாடுகளை வென்று தமிழரின் வீரத்தை பறைசாற்றியவன், தஞ்சையின் பெருங்கோயிலை எழுப்பி தமிழனின் திறமையை உலகிற்கே காட்டிய ராஜ ராஜ சோழன்தான் இந்த அருள்மொழிவர்மன்.
அருள்மொழி வர்மன் மணிமுடியை மீட்க இலங்கையில் போர் செய்கிறான், ஆனால் இலங்கை அரசன் தோல்வியடைந்து பயந்து ஓடி மறைந்து கொள்கிறான். அவனை தேடும் வேட்டையில் இருக்கும்பொழுது , இளையபிராட்டி குந்தவையின் ஓலையோடு அவனை சந்திக்கிறான் வந்தியத்தேவன். பிறகு அவர்கள் சோழநாடு திரும்புகிறார்கள்.
மர்மங்கள் நிறைந்தவைகளாகவும், திகில் நிறைந்தவைகளாகவும், காதல் நிறைந்தவைகளாகவும் கதை நகருகின்றது. அண்ணன் ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் இறந்துவிட, தனக்கு வர இருந்த பட்டாபிசேகத்தை தனது சிற்றப்பன் அமுதனுக்கு (உத்தமாசோழன்) சூட்டிவிட்டு, தான் தளபதி என்ற இடத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பிறகுதான் அரியணை ஏறி நாட்டை ஆளுகிறான் அருள்மொழிவர்மன், இவன் ஆட்சிகாலங்களில் பல சாதனைகள் புரிந்தான். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தான்.
இங்கே பொன்னியின் செல்வனைப் பற்றி நான் சொல்ல வந்ததே, வேங்கையின் மைந்தனைப் பற்றி சொல்வதற்காகத்தான். ஆமாம்! ஏனெனில், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பெயர்பெற்ற அளவிற்கு அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் அதிகமாக பேசப்படவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வனை வாசித்தவர்கள், நிச்சயம் அகிலனின் வேங்கையின் மைந்தனையும் வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஏனென்றால், கல்கியின் பொன்னியின் செல்வனுக்கும், அகிலனின் வேங்கையின் மைந்தனுக்கு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம், இதை எத்தனைபேர் உணர்ந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இரண்டு நூலையும் வாசித்துப் பார்த்தால் நான் சொல்வது எத்துணை தூரம் உண்மை என்பதை விளங்கிகொள்ள முடியும்.
பாண்டியன் மணிமுடியை மீட்க இலங்கைச் சென்ற அருள்மொழிவர்மன் அந்த மணிமுடியை மீட்கும் முன்பே தன் அண்ணன் இறந்துபோன செய்திகேட்டு சோழநாடு திரும்பிவிடுகிறான் இது பொன்னியின் செல்வனில் இடம்பெறும் காட்சி.
வேங்கையின் மைந்தனில் அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில், மீண்டும் மணிமுடியை மீட்க இலங்கைக்கு படை செல்கிறது, இந்த படையில் பொன்னியின் செல்வனில் வாலிபனாக இருந்த வந்தியதேவனும் இருக்கிறார், ஆனால் இதில் கிழவனாக இருக்கிறார். ராஜேந்திர சோழனின் அத்தை புருசன்தான் இந்த வந்திய தேவன். வேங்கையின் மைந்தனில் குந்தவி பிராட்டியும் இருக்கிறார்,
ராஜேந்திரனின் மருமகன் இளங்கோவேள் தான் இந்த வேங்கையின் மைந்தனில் நாயகனாக வலம் வருகிறான். ராஜேந்திர சோழனின் படையோடு இளங்கோவும் இலங்கைக்கு செல்கிறான், இவன் படையணிக்கு தலைவனாக பணியாற்றி. போரில் வெற்றியை குவிக்கிறான். இலங்கை அரசன் மகிந்தனிடம் இருந்த பாண்டியனின் பரம்பரை மணிமுடி ராஜேந்திரசோழனின் கைக்கு கிட்டுகிறது. தனது தாத்தா சுந்தர சோழராலும், தனது தந்தை ராஜராஜனின் முயற்சியாலும் மீட்க முடியாமல் போன மணிமுடி தனக்கு கிடைத்துவிட்டதை எண்ணி ஆனந்தம் கொள்கிறான் ராஜேந்திர சோழன். ஆனாலும் இலங்கை அரசின் தளபதி கீர்த்தியும், மகிந்தனின் மகன் காசிபனும் தப்பி ஓடி சதி செய்கிறார்கள். இதனால் ரோகனுத்து அரசன் மகிந்தனையும், அவன் மனைவியையும், அவன் மகள் ரோகிணியையும் சிறைபிடித்துக்கொண்டு சோழநாடு வருகிறான் ராஜேந்திர சோழன்.
ரோகனுத்து இளவரசி ரோகிணிக்கும் இளங்கோவேளுக்கும் காதல் மலருகிறது. இப்படி சொல்லப்பட்டு வரும் சரித்திரக்கதை, ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டி எழுப்பியதும். கங்கையை வென்று அங்கிருந்து நூற்றுக்கணக்கான யானைகளின்மீது சோழநாட்டிற்கு நீர்கொண்டு வந்ததும், வரலாற்றிலே தமிழன் மிகவும் நெகிழ்ச்சிகொள்கிற சம்பவங்களாகும்.
அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வருமுன்பே பொன்னியின் செல்வன் கல்கியின் கதை முடிந்து விடுகிறது. ஆகையினால் ராஜராஜனின் முழு வரலாறு இன்னும் அறிய வேண்டியதாக உள்ளது. ராஜேந்திர சோழனின் இளமைகால வரலாறுகளும் அறியப்பட வேண்டியதே.
ராஜேந்திரனின் மகள் அருள்மொழியும், அம்மங்கையும், நல்ல பண்புகொண்டவர்கள், அவர்களைப்பற்றிய வரலாறுகள் மேலும் இருக்குமா என்று தெரியவில்லை. ராஜேந்திரனின் மகன்கள் ராஜாதிராஜனும், ராஜராஜனும், சுந்தரசோழனும் நிறைய நிறைய சாதனைகள் புரிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன, ஆனாலும் அவைகள் இந்த நூல்களில் இல்லை. இளங்கோவேள் ராஜேந்திரனின் மகள் அருள்மொழியையும், மகிந்தனின் மகள் ரோகிணியையும் ஒரே மேடையில் திருமணம் புரிந்துகொள்வதோடு வேங்கையின் மைந்தன் முடிந்துவிடுகிறது. ஆனால் வரலாறு இன்னும் இருக்கிறது.
தோழமைகளே... பொன்னியின் செல்வன் படித்த கையேடு வேங்கையின் மைந்தனையும் வாசியுங்கள் நன்றாக இருக்கும், ஏனென்றால் இரண்டு சரித்திர கதைகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.
------ நிலாசூரியன் தச்சூர். (மீள்)
2014 ஆம் ஆண்டு எழுதியது.