வரலாறு என்பது நமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அழியா நிகழ்வு மட்டுமல்ல, நாளையத் தலைமுறைகளும் அசைபோடும் ஒரு நிகழ்வாக இருக்கலாம், ஒவ்வொரு பொருளுக்கும் அது எப்படி உருவானது என்கின்ற வரலாறு இருப்பதை போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாறு உண்டு, அதுபோலவே ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஒரு வரலாறு உண்டு, ஒவ்வொரு சாமானிய மனிதரும் ஏதாவது ஒரு வரலாற்றை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அழுத்தமான நிகழ்வுகள் மட்டும்தான் காலம் கடந்தும் பேசப்படுகின்றன.
இந்த மண்ணை இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக முகலாய இசுலாமியர்கள் ஆண்ட வரலாறு இருக்கின்றது, அவர்கள் பல வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களை எழுப்பினார்கள், அவைகள் அவர்களின் வரலாற்றை இன்றும் பறைசாற்றி கொண்டு இருக்கின்றன.
மனிதநேயமற்ற வெறித்தனத்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வேதனை ஒருபுறமிருந்தாலும், வானோக்கி இன்றும் நிமிர்ந்து நிற்கின்ற தாஜ்மஹால் சற்று ஆறுதலை அளிக்கிறது.
ஷாஜகான் என்றாலே உங்களுக்கு தாஜ்மஹால் நினைவுக்கு வரும், அல்லது தாஜ்மஹால் என்றாலே ஷாஜகானின் நினைவு வரும், ஆகையினால் அந்த மும்தாஜ் நினைவும் வராமல் இருக்காது.
தாஜ்மஹால் ஒரு வரலாற்றுச் சின்னம் என்றும், அதுஒரு புனிதமான காதலின் அடையாளம் என்றும் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள்.ஆனாலும் சிலருக்கு ஷாஜகான் மும்தாஜ் மற்றும் தாஜ்மஹால் வரலாறு சரியாகத் தெரியவில்லை என்பதே உண்மை. தாஜ்மஹால் பற்றியும் ஷாஜகான் பற்றியும் சில தவறான வரலாற்றினை பலர் புரிந்து வைத்து இருக்கிறார்கள், அதையே மற்றவர்களிடமும் கூறி வருகிறார்கள்.குறிப்பாக எனக்கு சிறுவயதில் சிலர் கூறியதை நானும் அப்படியே நம்பினேன்.
தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு அறிந்த பின்பே என் மனது பழைய தவறான புரிதலை கைவிட்டது என்பதே உண்மையாகும்.அதாவது, ஷாஜகான் ஒரு பெண்ணை காதலித்தானாம், அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் வேறு ஒருவனுக்கு கட்டி வைத்துவிட்டார்களாம், அதனால் அவளை நினைத்து அவளுக்காக கட்டியதுதான் தாஜ்மஹால் என்று ஒரு சாரர் கூறினார்கள்.
.ஷாஜகான் காதலித்த பெண் திடீரென இறந்துபோய் விட்டாளாம், அதனால் அவள் நினைவாக தாஜ்மஹால் கட்டப்பட்டதாக மறுசாரார் கூறினார்கள்.
ஷாஜகான் தன் காதலிக்கு பரிசாக தாஜ்மஹால் கட்டி தந்ததாகவும் இன்னும் வேறு வேறு விதங்களிலும் சிறு வயதில் எனக்கு சிலர் கூறி வைத்திருந்தார்கள், . இப்பொழுதும்கூட அப்படிதான் சிலரும் கருதுகிறார்கள்.ஆனால், தாஜ்மஹால் ஒரு கல்லறை என்பதையும், அதை ஒருவன் தன் மனைவியின் நினைவாக கட்டினான் என்பதையும், உண்மையென்று உரைத்துவிட்டால் தவறான புரிதல் இருக்கும் பலருக்கும் நல்லதென்று நினைக்கிறேன்.
காதலியை காதலிப்பதைவிட மனைவியை காதலிப்பதே இன்பம் அதிகம், அது கோடிமடங்கு அன்பைவளர்த்து, இறக்கும்வரை இன்பம்பெயக்கும், அந்த வகையில் இந்த தாஜ்மஹாலுக்கு சொந்தக்காரன் என் மனதில் உயர்ந்து நிற்கிறான்.பல ஆண்டுகளாக தாஜ்மஹாலை கட்டிமுடிக்க பாடுபட்ட உழைப்பாளிகளும், கட்டிடக்கலை நிபுணர்களும் அவர்கள்பட்ட துயரங்களும் அறியப்பட்ட வேண்டிய இன்னொரு மறுமுக வரலாறாகும்.
ஒரு துருக்கிய வீரனுக்கும்,ஒரு மங்கோலிய பெண்ணிற்கும் கலப்பு திருமணம் நடந்தேறியது, இந்த தம்பதிகளுக்கு பிறந்தவன்தான் பாபர், இந்த பாபர் மிகப்பெரிய வீரனாக வளர்ந்து, டெல்லியை தலைமையாக கொண்ட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினான், இவன் எட்டு பெண்களை திருமணம் செய்தானாம், திருமணம் செய்யாமலேயே பல தென் ஐரோப்பிய அழகிகளும் அந்தபுரங்களில் வசித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவனுக்கு பிறந்தது பதினேழு குழந்தைகள் என்றாலும் அதில் எட்டு எமலோகம் சென்றுவிட்டதாம். இந்த துருக்கி வீரனுக்கும் மங்கோலிய பெண்ணிற்கும் பிறந்த பாபரின் இனத்தையே மொகலாயர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
பாபருக்கு பிறகு பாபரின் மகன் ஹூமாயூன் தனது தலைமையில் டெல்லியை ஆட்சி செய்தான், இவனும் மது மற்றும் மாதுகளின் மீது மிகுந்த போதைகொண்ட மன்னனாகவே இவனது போக்கினை வரலாறுகள் சித்தரிக்கின்றன, பாபரைபோல திறமையான ஆட்சியினை இவன் மேற்கொள்ளவில்லை என்றாலும், பல சோதனைகளையும் வென்று தனது ஆட்சியை நிலைநாட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன, மேலும் இவனுக்கு இரக்ககுணம் மிகுந்து காணப்பட்டதாம், அதாவது யார் காலில் விழுந்து மன்னிப்பு கோரினாலும் உடனே இவன் மனம் இறங்கிவிடுமாம்.
ஹூமாயூன் இறந்த பிறகு அவரது மகன் அக்பர் 1556 பிப்ரவரி 14 லில் அரியணை ஏறினான். அக்பர் பற்றி நீங்கள் எல்லோரும் அறிந்து இருப்பீர்கள், அதோடில்லை அக்பரோடு இருந்த பீர்பால் பற்றியும்கூட அறிந்து இருப்பீர்கள்.அக்பருக்கு சலீம் என்கிற ஜஹாங்கீர், முராத், தானியேல் என்கிற மகன்கள் இருந்தார்களாம். அக்பருக்கு பிறகு ஆட்சியைப் பிடித்தவன் ஜஹாங்கீர் ஆகும். இவன் இருபது கல்யாணம் செய்துகொண்டவனாம், முந்நூறுக்கும் மேற்பட்ட அழகிகள் அந்தபுரங்களை ஆக்கிரமித்து இருந்தாக வரலாறுகள் பேசுகின்றன.
சலீம் என்கிற ஜஹாங்கீருக்கு முதலில் குஸ்ரு என்றமகனும், அடுத்து குர்ரம் என்ற மகனும் பிறந்தார்களாம். இந்த குர்ரம்தான் இன்று நமது கட்டுரையின் நாயகன். ஆம் இந்த குர்ரம் தான் அந்த தாஜ்மஹாலை கட்டி எழுப்பிய ஷாஜஹான். ஜஹாங்கீர்கு அடுத்தபடியாக, ஆட்சிக்கட்டில் ஏறியவன்தான் ஷாஜஹான்.இவன் தனது பாட்டன் அக்பரைபோல திறமையாக ஆட்சி நடத்தியதாக சில வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். டெல்லியை தலைநகரமாகக் கொண்டு ஒருகுடையின்கீழ் பல நகரங்களை திறமையாக ஆண்டுகொண்டு இருந்தான் ஷாஜஹான்.
பாபரில் இருந்து தொடங்கிய இந்த மொகலாய ஆட்சியின் ஆளுமை செம்மையாக நீண்டுகொண்டு இருந்தது. மொகலாயர்கள் இந்தியாவில் நுழைந்து, இந்தியாவை ஆள தொடங்கியபிறகு, இஸ்லாமிய இனம் நல்ல வளர்ச்சியை கண்டது. இவர்களை எதிர்த்து இந்திய குறுநில மன்னர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை நீடித்துக்கொண்டு இருந்தது. மொகலாயர் ஆட்சியில், அரண்மனையில் வருடத்திற்கு ஒரு முறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி, அங்கே பல அறிய பெருட்களை வைத்து விற்பனை செய்யும் வழக்கம் அரசகுல பெண்களிடம் இருந்து வந்ததாம்.
அப்படிதான் அன்றும் ஒருநாள் சந்தை நடந்துகொண்டு இருந்தது, சந்தையைக்காணச் சென்ற ஷாஜஹான் அங்கே சந்தைக்கு வந்த ஒரு கிளியை கண்டுவிட்டான், அப்பொழுதே மனதை அவளிடம் இழந்துவிட்டான். அந்த கிளியின் பெயர் அர்ஜுமான் பானு பேகம் என்பதாம், அர்ஜுமான் பானு பேகத்தின் அழகில் அசந்துபோன நம்ம ஷாஜகான். தனது தந்தை ஜஹாங்கீரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்கிறான். திருமணத்திற்கு பிறகு அந்த அர்ஜுமான் பானு பேகம் மும்தாஜ் என்று அழைக்கப்படுகிறாள்.
தனது மனைவி மும்தாஜ் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தான் ஷாஜஹான். உடலாகவும் உயிராகவும் இருவரும் இல்லறவாழ்க்கையை இன்பமாக அனுபவித்தனர். இருவரும் நண்பர்களைப்போல பழகினார்கள். அரச ரகசியங்களையும், அரியணை இயக்கங்களையும் தினமும் தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்வது ஷாஜகானின் வழக்கம். அதேபோல் ஷாஜகான் எங்கு சென்றாலும் மும்தாஜ் அவனோடு செல்வது வழக்கம். ஷாஜகானை பிரிந்து மும்தாஜ் தனியாக இருந்ததில்லை என்றே கூறலாம். இப்படி அன்பும் பாசமும் நேசமுமாய் இருந்த அந்த தம்பதியரின் வாழ்க்கைக்கு கிடைத்த மொத்த பரிசு பதினாலு குழந்தைகள். இதில் துருதிஸ்டவசமாக ஏழு எமலோகம் போய்விட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
அன்று 1631 ஜூன் 7 ஆம் தேதி, பீஜப்பூர் சுல்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தோடு, அந்தநாட்டின் எல்லைப்பகுதியான ஒரு காட்டில் தனது படை பரிவாரங்களோடு முகாமிட்டுருந்தான் ஷாஜகான். அப்பொழுது அவனுடன் சென்றிருந்த மும்தாஜ் தனது பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் உடம்பு சிலீரால் தூக்கி தூக்கி போட்டதாம், இதைக்கண்ட ஒரு தாதிப்பெண் ஓடிவந்து ஷாஜகானிடம் கூற, பதறிப்போன ஷாஜகான் ஓடிச்சென்று அவளை தூக்கி தனது மடியில் கிடத்தி இருக்கிறான், அடுத்தகணமே மும்தாஜியின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனதாம். மனைவியின் இழப்பை தாங்கமுடியாமல் கதறி அழுத ஷாஜகான், அந்த இழப்பின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான், தனது இயல்பான அரசர்க்குரிய ஆடை அலங்காரங்களை முற்றிலும் அவன் விரும்பாமல், சாதாரணமாகவே இருந்து வந்தான். அவன் எண்ணம் எப்பொழுதும் மும்தாஜ்யையே வட்டமிட்டுகொண்டு இருந்தது.
ஒரு நாள் தன் நெருங்கிய நண்பர்கள் சிலரோடு உரையாடிக்கொண்டு இருக்கையில் மும்தாஜ் பற்றி பேசி இருக்கிறார்கள், மனைவியின் நினைவினால் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட ஷாஜகான் அவளுக்காக ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்றானாம் அந்த எண்ணம் மிக வலுவடைந்தது. மும்தாஜ் இறந்த ஓராண்டிற்கு பிறகு தாஜ்மகால் கட்டும்பணி தொடங்கப்பட்டது. பல கட்டிடக்கலை வல்லுனர்களின் கூட்டுமதி நுட்பத்தினாலும், அவர்களின் பல ஆண்டுகால உழைப்பினாலும் தாஜ்மஹால் விண்ணோக்கி எழுந்தது நின்றது. பாரசீகம், ரஷ்யா, திபெத் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்கள் வாங்கிவந்து தாஜ்மஹாலில் பதிக்கப்பட்டன.
ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பில் இருக்கும்பொழுது அந்த செல்வங்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் நோண்டி எடுத்துக் கொண்டு போனது இன்னொரு வரலாறு ஆகும்.
ஒரு கணவன் தன் உயிருக்கு உயிரான மனைவிக்கு கட்டிய கல்லறைதான் இந்த உலக புகழ்பெற்ற புனித தாஜ்மஹால் ஆகும். மொகலாயர்களின் ஆட்சி காலங்களில் தாஜ்மஹாலுக்குள் செல்ல இஸ்லாமியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக தகவல். இந்த தாஜ்மஹாலை கண்டு பொறாமைகொண்ட ஆங்கிலேயர்கள் இதை இடித்துவிட செய்த சதியில் இருந்து அதிஸ்டவசமாக தப்பிவிட்டதால், இன்று உலக அதிசயங்களில் ஒன்றை நாம் இழந்துபோய்விடாமல் இருக்கிறோம். தனது தந்தை ஷாஜகானால், தனக்கு வரப்போகிற ஆட்சி அரியணை, தனது சகோதரனுக்கு போய்விடுமோ என்று எண்ணிய ஒவ்ரங்கசீப் தனது தந்தையை, தந்தை என்றும் பாராமல் சிறையிலடைத்து வைத்துவிட்டு அரசகட்டில் அமர்ந்தான். இந்த ஒவ்ரங்கசீப்தான் ஷாஜகானின் மூன்றாவது மகன் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.
மும்தாஜ் நினைவோடு தனது வாழ்நாளை சிறையில் கழித்த ஷாஜகானுக்கு அனைத்துமே மறுக்கப்பட்டன, அவரது அறையில் தாஜ்மஹாலை பார்பதற்காக மட்டும் ஒரே ஒரு ஜன்னல் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. எப்பொழுதும் அவர் தனது மனைவி புதைக்கப்பட்ட கல்லறையான தாஜ்மஹாலை ஜன்னல் சிறைகளுக்குள் இருந்து பார்த்து பார்த்து தனது காலத்தை போக்கினார்.1666 ஜனவரி 22 ஆம்நாள் 74 வயதான அந்த உத்தம புருஷன் இந்த மண்ணுலகைவிட்டு விடைபெற்றார், தனது தந்தை ஷாஜகானையும் அந்த மும்தாஜ் புதைக்கப்பட்ட தாஜ்மஹாளுக்குள்ளே புதைத்தான் ஒவ்ரங்கசீப்.
இப்பொழுதும் அந்த தாஜ்மஹாலுக்குள் ஒரு உன்னதமான கணவனும் மனைவியும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் அமைதியாக.
---------எழுதியவர்- நிலாசூரியன் தச்சூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக