ஞாயிறு, 27 மே, 2012

!!! நானும் எனது இரவும் !!!


இதமான தென்றலின் தழுவுதலால் 
வாசலில் உள்ள 
வேப்பமர இலைகள் 
சல சலவென 
தங்களது பாஷைகளை 
பரிமாறிகொள்ளும்...

மின்சார கம்பத்தில் அமர்ந்திருக்கும் 
சாமக்குருவி 
இரவின் மௌனத்தை தகர்த்து 
ஈட்டியை பாச்சும் ...

பட்டியில் கட்டியிருக்கும் 
மாடுகள் அசைபோட்டு 
இரவை மெல்லும்...

எங்கேயோ நான்கு ஐந்து 
நரிகள் ஒன்றிணைந்து 
ஊளையிடும் - அதை தொடர்ந்து 
தெருவில் உள்ள 
நாய்கள் அனைத்தும் 
தங்களது 
ஒலிப்பெருக்கியை முடுக்கிவிடும்...

ராப்பசியில் 
ஏதோ ஒரு வீட்டில் 
குழந்தை அழும் 
அதே வேளையில் அந்த 
குழந்தைத்தாயின் 
தாலாட்டு தொடரும்...

சில முதியோர்களின் 
நுரையீரலில் இருந்து 
வெளிப்படும் காற்று 
இருமலோடு 
இரவை குதறி துப்பும்...

சாக்கடையில் வாழும் 
தெருத்தவளை - தான் 
பாடுவதாக என்னி 
சில நேரங்களில் கத்தி கதறி 
இரவை இம்சை செய்யும்...

சுவரேறி குதித்து வரும் பூனைகள் 
சிலரது வீட்டின் 
சட்டி பானைகளை உருட்டி 
உறக்கத்தை கெடுக்கும்...

இரவின் இதயத்தை 
கிழித்துகொண்டு 
அப்பப்போ சில வாகனங்கள் 
சாலையில் செல்லும்...

நான் உருளும்போழுதும் 
புரளும்போழுதும் 
எனது கயிற்றுக்கட்டில் 
இரவோடு பேசும்...

ஊரே உரக்க போதையில் இருக்கும் 
நான் மட்டும் 
உறக்கத்தையே 
உறங்கவைத்துவிட்டு 
இரவை இருளில் தள்ளிவிட்டு 
விழிகளைமூடி 
விழித்துக்கொண்டு இருப்பேன்!
என் 
மனதிற்குள் ஆர்பரிக்கும் 
என் என்னக்கடல் 
என்னுடன் சேர்ந்து 
மௌனமாய் தியானிக்கும் 
நடுநிசி இரவில்...!!!

--- நிலாசூரியன் ---