சனி, 28 அக்டோபர், 2023

ஆண் பெண் இயற்கை


 ஆண், பெண் என்பது இயற்கையின் உருவாக்கமே தவிர! அதை யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. 

ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் அனைத்திலும் ஆண் பெண் என்ற இருக்கூறுகள் இருக்கின்றன, அவைகள் அனைத்தும் தன் இணையோடு இணைந்து வாழ்கின்றன, ஆண் பெண் இணைந்த வாழ்க்கை என்பது மன விருப்ப நகர்வாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம், ஆனால்! ஒருசில இணையருக்குள் ஏற்படும் மனகசப்பையும் முரண்பாடுகளையும் வைத்து ஆண் பெண் இணைந்த வாழ்க்கையே பெண்ணிய விடுதலைக்கு எதிரானது என்று முடிவு கட்டிவிட முடியாது. விலங்குகள் பெண் விலங்குகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வாழாதபோது, மனித இனத்திற்குள் மட்டும் இந்த ஆணாதிக்கம் என்ற இழிவான பண்பு எப்படி வந்தது என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும். என்றைக்கோ யாராலோ உருவாக்கப்பட்ட  சில ஆணாதிக்க உளவியல் கோட்பாடுகள்தான், இன்றைய ஆண்களையும் வழிநடத்துகிறது, அதுவே ஆணாதிக்க உளவியல் தொடர்வதற்கு முக்கிய காரணமாகவும்  இருக்கிறது என்றால் அதை மறுப்பதற்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

பிள்ளைப்பேறு என்பது இயற்கை பெண்களுக்கு மட்டுமே வழங்கிய பெறும்பேறு என்றே நான் கருதுகிறேன், விலங்குகளில் கூட பெண் விலங்குகளுக்குத்தான் பிள்ளைப்பேறு உண்டு, இந்த இயங்கியலில் ஒட்டுமொத்த ஆணிணமும் பெண்ணினத்திடம் தோற்றுபோய்விட்டார்கள் என்பதைதவிர வேறென்ன சொல்ல முடியும்? இந்த அரிய  செயல்பாட்டில்கூட தங்களை தாங்களே உயர்த்தி காட்டிக்கொள்ள வேண்டிய பெண்கள், ஏனோ தாழ்த்திக் கொள்கிறார்கள், ஏனெனில்! இந்த உலகிலுள்ள ஒட்டுமொத்த ஆணாதிக்க வெறியர்களும் கொஞ்சமாவது பெண்களை மதிக்கிறார்கள் என்றால் அது அவளது தாய்மையால்தான் என்று கூறத் தோன்றுகிறது, அப்படிப்பட்ட மரியாதை எங்களுக்குத் தேவையில்லை என்று மறுதளிக்கும் பெண்களில்கூட எத்தனை பேர் இதை உண்மையில்லை என்று மறுத்துவிட முடியும்? இயந்திரத்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் கூட அதற்கும் ஒர் ஆணின் உயிரணு அவசியம் தானே. 

அரைகுறை ஆடை அணிவதாலும், விரும்ய நேரத்தில், விரும்யோர்களுடன் சுதந்திரமாக சென்று வருவதாலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் விதிவிதமான புகைப்படங்களை போட்டுக்கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்துகொண்டு இருப்பதாலும், குடும்ப ஆண்களுடன் ஒத்துழையாமை வாழ்வு வாழ்வதாலும் ஆணாதிக்கத்தை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுவது வீணானது. முகநூல் பெண் புரட்சியாளர்கள் முகநூல் வட்டத்திற்குள்ளேயே தங்கள் பெண்ணிய விடுதலை முழக்கங்களை முழங்கிகொண்டு இருக்காமல், ஆண்ட்ராய்டு அலைபேசியிலேயே தங்கள் உரிமை போராட்டத்தை உருட்டிக்கொண்டு செல்லாமல், இந்த தேசம் திரும்பி பார்க்கும் அளவிற்கு தெருவில் இரங்கி போராட முனைய வேண்டும், காலம் காலமாய் தங்கள் மீது கட்டி எழுப்பபட்டுள்ள ஆணாதிக்க உளவியல் கூறுகளை கருத்தியல் ரீதியிலான சிந்தனைகளால் கருவறுக்க,  பெண்கள் அனைவரும் கரம்கோர்த்து களம்காண வேண்டும். 

முகநூலில் தங்கள் கருத்துக்களுக்கு ஓடி ஓடி வந்து பின்னூட்டம் போடுகிற ஆண்கள் அனைவரும் ஆணாதிக்கம் அற்றவர்கள் என்றும், தங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் ஆணாதிக்கம் உள்ளவர்கள் என்றும் அறிவாளித்தனமாக  நம்பிக்கொண்டு இருப்பவர்கள் ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும். இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வீட்டில் உள்ள  ஆண் குழந்தைகளை ஆணாதிக்கம் செய்ய கூடாது என்று சொல்லி சொல்லி வளத்திருந்தால் இந்நேரம் இங்கு ஆணாதிக்கம் ஓரளவிற்கேனும் ஒழிந்திருக்காதா? தங்களின் அரவணைப்பில் வளரும் குழந்தையை ஏன் இவர்களால் ஆணாதிக்கம் இல்லாத குழந்தையாக வளர்க்க முடியவில்லை என்ற கேள்விக்கு பெண்கள் கட்டும் சப்பைக்கட்டு எந்த அளவிற்கு ஏற்புடையதாக இருக்கும் என்று தெறியவில்லை, "ஒருத்தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம்" என்று கூறிய ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் ஹெர்பெர்ட்டின் கூற்றை பெண்கள் உற்றுநோக்க வேண்டும். அதுபோலவே "பெண்ணியம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் அல்ல, அது ஆணாதிக்கத்தை உயர்த்தி பிடிக்கும் இருவேறு கருத்தியலுக்கு எதிரான மோதல்" என்று இந்தியாவின் மூத்த பெண்ணியவாதிகளில் ஒருவரும், பெண்ணுரிமை அமைப்புகளின் முன்னோடியுமான அன்னை கமலா பாசின் கருத்தை பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் யாரும் எளிதில் கடந்துவிட முடியாது. பிள்ளையை வளர்க்கும் முழுபொறுப்பு தங்கள் கைகளில் இருக்கும்போதே எதையும் புரட்ட வேண்டும் என்று முயற்சிக்காதவர்கள், பிள்ளை வளர்ப்பிலும் இப்பொழுது ஆணாதிக்கம் ஊடுருவ பெண்களே காரணமாக இருக்கிறார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, இன்றைய சூழலில் பள்ளிகளில் இருந்தே பெண்ணிய வன்கொடுமைகளும், ஆணாதிக்க உளவியலும் ஒழிவதற்கு; பாடத்திட்டத்திலிருந்தே பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டப்பட  வேண்டும் என்று விரும்புகிறேன். 

ஆணாதிக்கம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் 20 வயதிற்கு மேல் 45 வயதுவரை மூர்க்கமாக இருப்பதற்கு வாய்பிருந்தாலும் அதன்பிறகு நரைப்பருவம் எய்தி கிழப்பருவம் எய்த எய்த அது படி படியாக குறையலாம், அதே காலகட்டங்களில் பெண்ணாதிக்கமும் தலைத்தூக்கி தாழத்தான் செய்யுமென்று நினைக்கிறேன். எது எப்படியோ ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதுதான் ஒரு சமூகம், ஒவ்வொரு சமூகத்தையும் ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதுதான் இந்த தேசம். குழந்தைகள் மூலம் குடும்பத்தையும், குடும்பத்தின் மூலம் சமூகத்தையும், சமூகத்தின் மூலம் தேசத்தையும், திருத்தும் முயற்சியை ஆண் பெண் இருபாலரும் இணைந்து மேற்கொண்டால் அது அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பின் ஆணாதிக்கம் குறைய வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் முறையான அன்பும், சரியான புரிதலும், விட்டு கொடுத்து வாழ்தலும் இருக்குமேயானால் எல்லாமே சாத்தியம்தான், மேலும் இது குடும்ப வாழ்விலிருந்து வெளியேறி போராடுவதை காட்டிலும் மேலானது என்றே தோன்றுகிறது. 

ஒவ்வொருப் பெண்ணும் தங்கள் மீது எப்படி ஆணாதிக்கம் உருவானது என்பதை சரியாக ஆராயத்தொடங்க வேண்டும், ஆண் பெண் வாழ்வியல் கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கும்போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட பிழையை திருத்த வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அதுபோலவே மனித வாழ்வின் முக்கிய வழிகாட்டியாக கருதப்படும், நம் முன்னோர்கள் எழுதிய இதிகாசங்கள், புராணங்கள் போன்றவைகள் ஆணாதிக்க செயலுக்கு அடித்தளமிட்டு இருப்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டிய அதே வேளையில், சாதி, மதம், கடவுள் போன்ற கூறுகளை கொண்டு கலந்து செய்யப்பட்ட நம் வாழ்வியல் கோட்பாட்டில், எங்கெங்கெல்லாம் பெண்ணடிமைக்கு வித்திடும் கருத்துக்கள் புரையோடி இருக்கின்றனவோ அவைகள் திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

பெண்களுக்கு எதிரி ஆண்கள் அல்ல, காலம் காலமாய் பழகிப்போன ஆணாதிக்க உளவியல்தான் பெண்களுக்கு எதிரி, எனவே... அழிக்க வேண்டியது புரையோடி கிடக்கும் ஆணாதிக்க உளவியலைத்தானே தவிர ஆண்களை அல்ல, இந்திரன் செய்த தவறுக்கு அகலிகை பெற்ற சாபம் பற்றியும், தாருகாவனத்தில் சிவன் செய்த சித்து விளையாட்டு பற்றியும் எத்தனை பெண்களுக்கு தெரியும்? அவர்கள் எழுதி வைத்துவிட்டு போன புராணத்தை  நான் படித்துச் சொன்னால், மதத்தை புண்படுத்திவிட்டான்,  கடவுளை இழிவு செய்கிறான் என்று கோபம் கொள்கிற பெண்களில், அங்கிருந்துதான் பெண்களின் மீதான தாழ்வு எண்ணம் தலைதூக்கி இருக்கிறது என்பதை எத்தனை பேர் புரிந்து இருக்கிறார்கள்? கட்டிய மனைவியின் கர்ப்பை சோதிக்க அவளை தீயில் இறக்கியதோடு மட்டுமல்லாமல், கர்ப்பத்தில் குழந்தையை சுமந்து கொண்டிருந்த அவளை, அடந்த காட்டில் கொண்டு விட்டவனை உத்தம புருஷன் என்று சொல்லும் பெண்களுக்கு, அவனைவிட தன் கணவன் எவ்வளவோ மேல் என்று ஏனோத்  தோன்றவில்லை, பழங்கால வரலாற்று நூல்களையும், சமயநெறி நூல்களையும், வேத நூல்களையும், இலக்கியங்களையும் முதலில் பெண்கள் வாசித்துப் பார்க்கட்டும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் பெண்களுக்கான நீதி என்னவென்று தெரிந்து கொள்ளட்டும், அப்பொழுதுதான் பெண்கள் ஏன் அடிமையானவர்கள், எப்படி அடிமையானவர்கள் என்பதை புரிந்துகொள்வதோடு, அவர்கள் யாரை எதிர்த்து போராட வேண்டும் என்பதையும் விளங்கிகொள்ள முடியும்.  நமது சமூக வாழ்வியல் கட்டமைப்பு எந்த அளவிற்கு உன்னதமானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உறுதிபாடு அற்றதாகவும் இருக்கிறது, பெண்ணடிமை என்பது அனைத்து மதங்களிலும், அனைத்து சாதிகளிலும் இருக்கின்ற ஒரு பொதுவான இழிவாக தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையின் உச்சம் என்பதை ஒருபோதும் மறுப்பதற்கில்லை. ஆழமாய் வேரூன்றி ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஆணாதிக்க உளவியலின் கிளைகளை மட்டும் வெட்டுவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. 

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதென்பது ஒரு இயற்கையான உணர்வுதானேயொழிய அதை யாரும் திட்டமிட்டு செயற்கையாக புகுத்தவில்லை என்பதை முதலில் பெண்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும், இயற்கைக்கு எதிரான எந்த செயலும் அழிவை மட்டுமே பரிசாக வழங்கும், இது காலம் நமக்கு உணர்த்தி கொண்டு இருக்கும் உண்மை, அந்த வகையில் பெண்களோ அல்லது ஆண்களோ முற்றிலும் தனித்து வாழ்வதென்பது உலக மனிதகுல அழிவின் உச்சமேயன்றி வேறில்லை. 

ஒவ்வொரு ஆணுக்குள்ளும்  உலவிகொண்டிருக்கும் அவனது ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டுமேத்தவிர, ஆண்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, பெண்கள் நாங்கள் தனித்தே வாழ்ந்து காட்டுகிறோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுகிறார்கள், அவர்களின் துணிச்சல் பாராட்டிற்குரியது என்றாலும்கூட, ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டே, தங்கள் குடும்ப ஆண்களை ஆணாதிக்க பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. அதற்கான போராட்டம் மிக கடுமையானது என்றாலும்கூட அதன் வெற்றியால் கிடைக்கும் உளவியல் நீதி பல தலைமுறையை புனிதமாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


---- நிலாசூரியன் தச்சூர் 

சனி, 27 மே, 2023

பொது அறிவும் புது முயற்சியும்


 பொது அறிவும் புது முயற்சியும், நா. தருவின், இரண்டாம் வகுப்பு. இந்தியாவில் உள்ள மாநிலங்கள், மாநில விலங்குகள் மற்றும் பறவைகள்.

வியாழன், 25 மே, 2023

பொது அறிவும் புது முயற்சியும்


 இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள். நா. தருவின், இரண்டாம் வகுப்பு 

சனி, 8 ஏப்ரல், 2023

திருக்குறள்


 60 வது திருக்குறளை அழகாகச் சொல்லும் ஒன்றாம் வகுப்பு மாணவன், நா. தருவின். First Standard Student N. Tharuvin, Tamil Thirukkural.

திங்கள், 20 மார்ச், 2023

உலக சிட்டுக் குருவிகள் தினம்


 இன்று மார்ச் 20 உலகச் சிட்டுக் குருவிகள் தினம், இந்த நாளில் சிட்டுக் குருவி இனம் அழியாமல் இருக்க, நாம் நம்மாலான முயற்சியினை மேற்கொள்வோம்.

 சாம்பல் நிற சிட்டு, கருஞ்சிட்டு, தேன்சிட்டு என்று சிட்டுக் குருவிகள் பலவகை இருப்பதாகக் கூறப்படுகிறது, இதில் தேன்சிட்டும் கருஞ்சிட்டும் அடர்ந்திருக்கும் வேலியோரங்கலில் கூடுகட்டி வாழும் தன்மையுடையவையாக இருக்கின்றன, ஆனால் சாம்பல் நிற சிட்டு மட்டுமே, மனிதர்கள் வாழும் வீடு, பள்ளிக்கூடம், கோயில் போன்ற இடங்களில் வாழ்வதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டிருக்ககூடும், 1987 லிருந்து 1991 வரையிலான காலங்களில், நான் பிறந்த ஊரான கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தச்சூர் கிராமத்தில், ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்தேன், அந்த காலகட்டங்களில், பள்ளிக்கூட கட்டிட சுவருக்கும் ஓட்டுக்கூரைக்கும் இடையிலான சிறு சிறு ஓட்டைகளிலும் சந்துகளிலும் சிட்டுக் குருவிகள் வாழ்வதை எனது நண்பர்களோடு நான் கண்டு மகிந்திருக்கிறேன்,  சாம்பல் நிற சிட்டுக்கள்,  சில முழு சாம்பல் நிறத்திலும், சில வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறத்திலும், சில தலையிலும் கழுத்திலும் கருப்பு நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும், சிறகு பகுதிகள் காக்கி கலந்த சாம்பல் நிறத்திலும் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், இந்த சிட்டுக் குருவிகளை தினமும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் கண்டு வந்ததனாலும், இவை பள்ளிக்கூடத்தையே தங்கள் இருப்பிடமாக கொண்டதனாலும்,   இந்த சாம்பல் நிற சிட்டுக்களுக்கு நாங்கள் "பள்ளிக்கூடத்துக் குருவி" என்று பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினோம், எங்கள் ஊரில் அப்பொழுதெல்லாம் எல்லோருமே பள்ளிக்கூடத்துக் குருவி என்றுதான் சொல்வார்கள், இன்றும்கூட பலர் அப்படித்தான் சொல்கிறார்கள்.

தற்பொழுது சிட்டுக் குருவிகள் இனம் அழிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது, முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் விரவி இருந்த சிட்டுக் குருவிகளை இப்பொழுதெல்லாம் எங்கோ சில இடங்களில் மட்டுமே காண முடிகிறது, எனவேதான் அவை அழிந்து வருவதாகச் சொல்லப்படுவது உண்மையாகத்தான் இருக்குமோ என்று நம்பத் தோன்றுகிறது. 

இன்று நான் வாழும் வாடகை வீட்டில், சொந்தவீடுகட்டி வாழும் சிட்டுக் குருவிகளிடம்  நான் அன்பாகப் பழகுகிறேன், மனிதர்களால் சொல்லிக் கொடுக்கமுடியாத வாழ்வியல் பாடத்தை அவைகள் எனக்கு சொல்லிக் கொடுக்கின்றன.

நான் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கிய எங்கள் வாடகை வீட்டில் வாழும் சிட்டுக் குருவிகளுக்கு நன்றி சொல்லக் கடமைப்படுகிறேன்.

----- நிலாசூரியன் தச்சூர்.

வியாழன், 9 மார்ச், 2023

எனது நண்பன் சகாவின் படுகொலைச் சம்பவம்


ஒவ்வொரு தனிமனிதனின் இறந்தகால வாழ்க்கைதான் அவனது நிகழ்கால வரலாறாக பார்க்கப்படுகிறது, நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், காலம் நம்முள் தவறாமல் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது,  எனது இறந்த காலம் என்னுடனேயே இறந்து போகாமல் இருப்பதற்கு,  என் வாழ்வில் காலம் பதிவு செய்த பல்வேறு நிகழ்வுகளில், 1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு சிறு உண்மை நிகழ்வோடு கற்பனையை புனைந்து இந்த கதையை எழுதுகிறேன், இந்த கதை நகர்வில் என்னையே ஒரு‌ அங்கமாக இணைத்து, கதை சொல்லி போல் காட்ட முயர்ச்சித்து இருக்கிறேன். 


 சகாதேவனும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் என்றால் சாதாரணமானது அல்ல,  மிக பெரிய பாச பிணைப்பு எங்களது உறவு, வீட்டில் மட்டுமல்ல ஊரில் உள்ளவர்களும்கூட எங்கள் நட்பை கண்டு ஆச்சர்யப்படுவார்கள், அந்த அளவிற்கு எங்கள் பாசப்பிணைப்பு  மேலோங்கி இருந்தது. பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு சகா மிகவும் அழகாக இருப்பான், மிகவும் திடமான உடற்கூறு அவனுக்கு, அதனாலேயே எங்கள் ஊரில் அவன்மீது பலர் கண் வைத்தார்கள், எங்கள் தெருவில் உள்ள அவனது தோழர்களுக்கும் தோழிகளுக்கும் அவன் ஒரு தலைவனாக இருந்தான்,  அவனது தோழர்களும் தோழிகளும் அவனிடம் மிகவும் பணிவாகவும் பாசமாகவும்  நடந்துகொள்வதை நான் பலமுறை பார்த்து இரசித்து இருக்கிறேன், அப்பொழுது எல்லாம் சகாவை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். 

சகாவின் தோழிகள் பலர் சகாவை தங்கள் காதல் வலையில் வீழ்த்த முயன்று இருக்கிறார்கள்,  ஆனால், சகா அதற்கெல்லாம் ஒருபோதும் இசைந்ததில்லை, அவன் எங்கள் வீட்டிற்கும் எதிர்வீட்டில் இருந்த பானுவை  உயிருக்கு உயிராய் காதலித்தான்,  அதனாலேயே சகா மற்ற தோழிகள் வீசிய காதல் வலையை ஊடறுத்து பானுவை மட்டுமே நெஞ்சில் தாங்கி, உண்மையான காதலோடு வாழ்ந்தான். 

பானு, சகா, இவர்களின் காதல் மிகவும் புனிதமானது என்றுதான் சொல்ல வேண்டும், ஒவ்வொரு நாளும் அவர்களின் சந்திப்பும் காதல் கலவிகளும் மிகவும் சுகமானதாகவும், சுவராசியமானதாகவும், வியப்பிற்குரியதாகவும் இருந்தது, எங்கள் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தடியில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள், அந்த வேப்பமரம் இன்றும் இருக்கிறது, ஆனால், எனது ஆருயிர் நண்பன் சகா என்னை விட்டு எங்கோ போய்விட்டான் என்று எண்ணும்பொழுது, நெஞ்சம் வேதனை அடைகிறது. 

 என் நேசிப்பிற்குரிய  நண்பன் சகா இன்று உயிரோடு இல்லை என்பதை என்னும்பொழுது மனது கணமாகி கண்கள் குளமாகிறது, அவன் தானாக சாகவில்லை, பொல்லாத கொடிய மனிதர்களால் படுகொலை செய்யப்பட்டான் என்பதுதான் உண்மை,  அப்பொழுது அவனை காப்பாற்ற சொல்லி கடவுளிடம் கையேந்தினேன் அது பயனற்று போகவே, அன்றுதான் கடவுளை கல்லென்று வசைமொழிந்தேன். 

சகா படுகொலை செய்யப்பட்டபொழுது எனக்கு வயது பதினான்கு,  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஆதலால்,  வலியோர்களிடமிருந்து சகாவை காப்பாற்ற கடுமையாகப் போராடி தோல்வியில் விழுந்தேன்,  எதிரிகள் எவ்வளவு பெரிய பலசாலிகளாக இருந்தாலும் கூட  சகா எளிதாகவும் இலகுவாகவும் தாக்கி வீழ்த்திவிடுவான்,  இதனாலேயே அவனை எதிர்க்க அவனது வட்டத்தில் எல்லோரும் பயந்தார்கள், தன்னம்பிக்கையும் தைரியமும்  அவனுக்கு மிக பெரிய ஆயுதமாக இருந்தன, கருப்பும் சிவப்பும் மஞ்சளும் கலந்த அவனது உருவம்,  ஓவியமாய் உள்ளத்தில் இன்றும் பதிந்திருக்கிறது. அவன் சிறு வயதில் இருந்தே எனக்கு நெருங்கிய நண்பனாகிப் போனான், எனது குரலை கேட்டால் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான், என்னுடைய தொடையில்  அமர்ந்துகொண்டு என்னுடன் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றே சொல்லலாம், விடிந்துவிட்டது எழுங்கள் என்று எல்லோரையும்  முதல் ஆளாய் தட்டி எழுப்பும் அவனது பணி மகத்தானது.

 சகா மிகவும் அன்பானவன்,  அவனுக்காக வைக்கும் சாப்பாட்டை அவன் தனியாக சாப்பிடுவதில்லை, அவனது காதலி பானுவை எங்கிருந்தாலும் ரகசியமாக  கூப்பிட்டு அவளோடு  இணைந்து சாப்பிடுவதுதான் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று, இதை கண்டு நானே பலமுறை மெய்சிலிர்த்து போயிருக்கிறேன். 

நான் பள்ளிக்கு செல்லும்பொழுதுகூட என்னை பிரிய மனமின்றி,9 என் மிதி வண்டியில் ஏறி அமர்ந்து கொள்வான், வலுகட்டாயமாக இறக்கிவிட்டுவிட்டு  செல்வேன், அப்பொழுதும்கூட சிறிதுதூரம் எனது பின்னாலேயே வருவான். 

 ஒரு நாள் நான் தோட்டத்திற்குச் சென்று மாட்டுக்கு சோளத்தட்டை கொண்டு வந்து,  வீட்டு வாசலில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக்கொண்டு இருந்தேன்,  எனது அருகில் சகாவும் பானுவும் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள், நான் ஒரு பிடி தட்டையை எடுத்து துண்டு துண்டாக வெட்டிவிட்டு அடுத்த பிடியை அள்ளப் போனேன் உடனே சகா ஒரே கத்தாக கத்திக்கொண்டு ஓடிவந்து  நான் அள்ளப்போன அந்த சோள தட்டைகுள்ளிருந்த ஒரு கட்டுவிரியன் பாம்பைக் கொன்று என்னை காப்பாற்றினான், ஆனால் அவனைத்தான் என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

 அன்று நிறைந்த வெள்ளிகிழமை, சகா சாமிக்கு நேந்துவிட பட்டவனாம், அதனால் இன்று அவனை குலசாமிக்கு காவு கொடுக்க போகிறார்களாம்.... அப்பா இந்த விடயத்தை சொன்னதும் என் மனது பக்கென்று தூக்கிவாரி போட்டது, மனதில் துக்கம் வந்து குடிகொண்டது, சகாவை கொலை செய்ய போகிறார்களா? இது என்ன அநியாயம்,  மனதிற்குள் குழம்பி அழுதேன், கரை உடைந்த காட்டாறாய் கண்கள் உடைந்து வெள்ளப்பெருக்கானது, 

 சகாவை கொல்ல வேணாம்பா, பாவம் அவன விட்டுடலாம் என்று அப்பாவிடம் அழுதுகொண்டே சொன்னேன். 

இல்லபா அது சாமிக்கு நேந்துவிட்டது நேர்த்திகடன் செய்யலன்னா சாமி குத்தம் ஆயுடும், நீ  தயாராகு கோவிலுக்கு கெளம்பலாம்  என்று சொல்லி அப்பா நகர்ந்தார், எனக்கு மேலும் அழுகை அதிகரித்தது, நேராக அம்மாவிடம் சென்று, அம்மா சகாவை கொல்ல வேணான்னு அப்பாகிட்ட சொல்லுமா, அவனையும் உன் பிள்ளை மாதிரிதானே வளர்த்த,  பாவம்மா அவன்,  விட்டுட சொல்லுமா... அழுதுகொண்டே அம்மாவிடம் கெஞ்சினேன், இல்ல தங்கம்,  அது சாமிக்கு நேந்துவிட்டது, நேர்த்திகடனை செய்யாம விட்டுட்டா தெய்வகுத்தம் ஆயுடும்... என்று என்னை பெற்ற எனது தெய்வம் இரக்கமே இல்லாமல் சொன்னது. 

வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள், நான் சகா என்று அழைத்தேன் சகா ஓடி வந்தான், அவனை தூக்கி எடுத்து மார்போடு அணைத்து  முத்தமிட்டேன், தான் சாகபோகிறோம் என்றுகூட தெரியாமல் அவன் சிரித்தான்.

 சகாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்திற்குச் சென்றேன், வைக்கோல் போருக்கு அடியில் அவனை அனுப்பிவிட்டு, டேய் உன்னை கொல்ல போறாங்க இங்கேயே ஒளிஞ்சிக்கோ, எக்காரணம் கொண்டும் வெளியே வராதே என்று சொல்லிவிட்டு வந்தேன். 

அவன் எனது பேச்சை கேட்காமல் மீண்டும் மீண்டும்  வெளியே வந்தான், எனக்கு கோபம் வந்துவிட்டது,  அவனை தலையில் ஒரு கொட்டு வச்சி மீண்டும் வைக்கோல் போருக்கடியில் விட்டு வெளியே வந்த அடி பிச்சுபோடுவேன் என்று திட்டிவிட்டு வந்தேன், பிறகு அவன் வெளியே வரவில்லை. 

வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பிவிட்டார்கள், எங்கே சகாவை காணும் கூப்பிடு என்றார் அப்பா,  உடனே அம்மா சகா... என்று  குரல் கொடுக்க, அம்மா அன்பாக கூப்பிடுகிறார்கள் என்ற சந்தோசத்தில்  கத்திகொண்டே  ஓடிவந்தான் அந்த கிறுக்கு பய புள்ள. 

டே முட்டாப்பயலே, ஏன்டா வந்த? இது அம்மா இல்லடா கொலைகாரி என்றேன், அவன் நான் சொல்வதை காதில் வாங்காமல் அம்மாவை கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

 எல்லோரும் கோவிலுக்கு கிளம்பினார்கள், அப்பா அம்மாவின் மிகுந்த வற்புறுத்தலக்கு பிறகு நானும் அவர்களுடன் சென்றேன்,  அப்பா சகாவை அழைத்துக்கொண்டுச் சென்றார், இன்று ஏதோ விசேசம் போல் இருக்கிறது என்ற சந்தோசத்தில் சகா அப்பாவோடு சென்றான், அவனுக்கு எப்படி தெரியும்? விசேசமே அவனை கொலை செய்ய போவதுதான் என்று.....?  நான் அப்பாவின் அருகில் சென்று, அப்பா வேண்டாம்பா அவன விட்டுடுங்கப்பா,,,  அவன கொன்னா  நமக்கு பாவம்தாம்பா வரும்,  புண்ணியம் கிடைக்காதுப்பா, எந்த சாமியும் உயிர்பலி கேட்காதுப்பா, அப்படி கேட்டா அதுக்கு பேரு சாமியே இல்லப்பா, அவன விட்டுடுங்கப்பா என்றேன், பெரியார் பேரன் வந்துட்டான்  பெத்தவனுக்கே பாடம் சொல்ல! இது எல்லாம் வழக்கமா நடப்பதுதான் நீ பேசாம வாப்பா என்று அப்பா சொல்ல, சகாவை காப்பாற்றும் முயற்ச்சியில் மீண்டும் படுதோல்வி அடைந்தேன்.

 கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தது, சகாவை பறிகொடுக்கபோகிறோம் என்ற மேலோங்கிய வருத்தத்தில் நான் ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தேன், எனது அருகில் கழுத்தில் மல்லிகைபூ மாலைபோட்டுகொண்டு வண்ண வண்ணமாய் பொட்டு வைத்துகொண்டு சகா நின்றுகொண்டு இருந்தான், நான் அவனை பிடித்துத் தூக்கினேன் டேய் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ சாகபோற என்னால உன்னை காப்பாற்ற முடியல, முடிஞ்சா தப்பித்து ஓடி போய்டு என்று அவனை தூரத்தில் தள்ளிவிட்டேன்,  இதை பார்த்த அம்மா இவனுக்கு கிறுக்கு புடிச்சி போச்சி என்று என்னை திட்டினார்கள், சகா மீண்டும் என் அருகிலேயே வந்து நின்றான். 

பூசாரி சூரி கத்தியை கையில் வைத்து கொண்டு பலியிடுதற்கு தயாரானார், அப்பா சகாவைத் பலி பீடத்திற்கு கொண்டுச் செல்ல, அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல், மனம் ஓவென கதறி அழுதது, சகா சாகபோவதை என் கண்ணால் நான் எப்படி காண முடியும்? அதை எப்படி என்னால் தாங்க முடியும்?  பட்டென கோவிலில் இருந்து வெளியேறினேன், எங்கப்பா போற இரு சாமி கும்பிட்டுட்டு போகலாம் என்று அம்மா சொல்வதை பொருட்படுத்தாமல், ஒரு உயிரை பலிகொடுத்து அதில் கிடைக்கிற சாமி பாசம் எனக்குத் தேவையில்லை என்று எண்ணியவாறே வேகமாக நடந்தேன். 

 அம்மா ஓடி வந்து என் கையை பிடித்தார்கள், என்னை விடு நான் போறேன் என்று அழுதேன், அம்மா என்னை விடவில்லை, அம்மாவின் பிடியில் இருந்து எப்படியோ திமிறி விடுபட்டு விலகினேன், அப்பொழுது பக்கத்தில் இருந்த இரண்டு பெரியவர்கள் என்னை பிடித்தார்கள், அவர்களின் பிடியில் இருந்து என்னால் மீள முடியவில்லை, பதினான்கு வயது சிறுவன் அல்லவா,  என்ன செய்ய? விடுங்கடா கொலைகார சண்டாள பாவிகளா, என்று கூறி கதறி அழுதேன், எனது கதறலைக் கண்டு மனமிரங்கி  அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள். 

வேகமாக வீடு வந்து கயிற்றுக் கட்டிலில் குப்புற படுத்து தலையணையை கண்ணீர்கொண்டு நனைத்தேன், இந்நேரம் என் சகா செத்திருப்பான், அவனை வெட்டி கொலை செய்து இருப்பார்கள் என்று எண்ணும்பொழுதே அழுகை தேம்பலாக மாறியது,  அன்று இரவெல்லாம் உறங்கவே முடியவில்லை, சகாவின் நினைவுகள் பைத்தியமாக்கி கொண்டு இருந்தது, நாளையிலிருந்து சகாவோடு விளையாட முடியாது, குடும்பத்தில் ஒருத்தனாக இருந்த சகாவை குடும்பமே சேர்ந்து கொலை செய்கிறதே இது எத்தகைய கொடியப் பண்பு என்று நினைக்கும்பொழுது  உள்ளம் குமுறியது.

 தினமும் உறங்கிக்கொண்டு இருக்கும் ஊரை இனி யார் எழுப்புவார்கள் என்றுத் தெரியவில்லை, இனி எந்த விடியலும் சகாவின் குரலை பதிவு செய்ய போவதில்லை, நேற்றைய இரவு திரும்பவும் இன்று வரப்போவதில்லை, என்னுள் எழுந்த சோக நினைவுகளுனூடே எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை, விழித்தப்பொழுது சூரியன் உதித்து இருந்தது, வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தேன், வேப்ப மரத்தடியில் பானு நின்றுகொண்டு இருந்தாள், நான் அவளை பார்த்தேன் அவள் சிறு சத்தம் போட்டவாறே என்னை பார்த்தாள், அந்த சத்தமும் பார்வையும் எங்கே என் சகா என்று அவள் கேட்பதை நான் புரிந்துகொண்டேன், ஆனால், அவளுக்கு நான் என்ன பதில் சொல்வது, எப்படி சொல்லி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை, அவளை நினைத்தால் மிகவும் வேதனையாக இருந்தது.  

அன்று முழுவதும் அவள் அந்த வேப்பமரத்தடியை விட்டு நகரவே இல்லை, அவளுக்கு நான் சாப்பாடு கொடுத்தேன் அதை அவள் உண்ணவில்லை, ஒரு நாள் முடிந்தது, மறு நாளும் அவள் அதே மரத்தடியில் நின்றுகொண்டு சகாவை தேடினாள், அவள் முகத்தில் தன் காதலனை காணவில்லையே என்ற பெருத்த சோகம் குடிகொண்டு இருந்தது, உடல் சோர்வுற்ற நிலையில் அவள் இருந்தாள். 

பாவம் அவள் என்ற பரிதாபத்தோடு என்னால் கடந்துச்செல்ல முடியவில்லை.

 அவளிடம் எப்படி சொல்வேன்,  உன் சகாவை பல கயவர்கள் சோர்ந்து படுகொலை செய்துவிட்டார்களென்று,

 "என்னால் முடியாது,"

 "நிச்சயம் முடியாது," தயவுசெய்து நீங்களே அவளிடம் சொல்லிவிடுங்கள். 


 முக்கியக்குறிப்பு;
-----------------------------
சகாதேவன் என்கிற ''சகா'' நான் செல்லமாக வளர்த்த எனது சேவலின் பெயர். 

''பானு'' எங்கள் வீட்டின் எதிர்வீட்டில் பூங்காள் ஆயா வளர்த்த பெட்டைகோழிக்கு கதைக்காக  நான் வைத்த பெயர்.

2012 ல் எழுதியது. 

சனி, 4 பிப்ரவரி, 2023

அப்பா பாசம் (சிறுகதை)

அப்பா பாசம் (சிறுகதை)

---------+++++++-----------

''அப்பாவ பற்றி சொல்வதற்கு  நிறைய இருக்கிறது.   ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன  செய்வாரோ  அதைவிட கூடுதலாகவே அப்பா எனக்கு செய்து இருக்கிறார், அவர் எனக்காக செய்ததை எல்லாம் கூற முற்பட்டால் இது நெடுங்கதையாகிவிடும் என்பதனால் ஒரு சிறு சம்பவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.''

அன்று ஒருநாள் கடுமையான பசி.

அம்மா பசிக்கிது சோறு போடு என்றவாறே 

அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு அழுதேன். 

இருசாமி  அப்பா வந்துடட்டும் அப்புறமா சாப்புடலாம், என்று அம்மா கூற. 

போங்க எனக்கு பசிக்கிது, இப்பவே வேணும் என்று அடம்பிடித்தேன். 

சொன்னா கேளு ராசா, இப்ப  அப்பா வந்துடுவாங்க எல்லோரும் சேர்ந்து சாப்புடலாம் என்ன, அம்மா சமாதானம் கூறினார். 

உச்சிவெயில் மண்டையை பிளக்க, எங்கு பார்த்தாலும் ஒரே வெக்கையாக இருந்தது. காற்றை காணவில்லை, மரம் மட்டைகள் எல்லாம் மந்திருத்துவிட்டாற்போல் அசைவற்று இருந்தன. 

அப்பாவின் உடம்பில்மட்டும் வியர்வை ஊற்றாய் சுரந்து, இடுப்பில் சுற்றியிருந்த இருமுழ துண்டையும் நனைத்து பாதம்வழியாக பூமியில் இறங்கிகொண்டு இருந்தது. 

அங்க போகாதப்பா பூச்சிப் புழு கெடக்கும் என்று அம்மா சொல்வதை காதில்போட்டுக் கொள்ளாமல், வேப்ப மரத்தடியில் இருந்து வயலுக்கு ஓடினேன், அப்பா.... அப்பா... என்று கூவி அழைத்தேன். 

ஏரை நிறுத்திவிட்டு என்னடா கண்ணா என்று அப்பா கேட்டார். 

அப்பா பசிக்கிதுப்பா வாப்பா சாப்புட, நீ வந்தாதான் சாப்புடணும்னு அம்மா சொல்லிச்சி. 

இருடா கண்ணா, இந்த ஒரு விளாவமட்டும் தேச்சிபுட்டு வந்துடுறேன்.

போங்க எனக்கு பசிக்கிது,,, என்று கூறியவாறே அழுதேன். 

அடடா... அழாதடா இந்தா வரேன், என்றவாறே ஏரை நிறுத்திவிட்டு வாய்க்காலில் தேங்கிக்கிடந்த குட்டை நீரில் கையையும் காலையும் கழுவிக்கொண்டு அப்பா வந்தார். 

எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது, அம்மா சோறுபோடு அப்பா வராரு என்றேன். 

சரி சரி நீ இங்க வந்து ஒக்காரு போடுறேன் என்று கூறியவரே அம்மா தட்டில் சோறுபோட்டு, நேத்து வச்ச அசரமீன்  கொழம்ப ஊத்தி அப்பாவுக்கு கொடுக்க, அப்பா அதை வேகமாக பிசைந்து முதல் கவாளத்தை எனக்கு தந்தார். 

அதுக்காகத்தான் காத்துக்கொண்டே இருந்ததைப்போல நான் வேகமாக வாங்கிகொண்டேன். அவனுக்கு நான் தரேன் நீ சாப்புடுய்யா என்று அம்மா கூற. சும்மா இருடி, புள்ள பசியில தவிச்சிபோயிட்டான், அவனவிடவா நமக்கு சோறு முக்கியம்? என்றவாறே அடுத்த கவாளத்தை கையில் வைத்தார். 

அப்பா நீயும் சாப்டுப்பா என்றேன், 

நீ சாப்டு ராசா நான் அப்புறமா சாப்புடுறேன் என்று அப்பா கூற. 

போ, நீ சாப்புட்டாத்தான் நான் சாப்புடுவேன் என்றேன். 

பாத்தியாடி என் புள்ளைய, இவந்தாண்டி நாளைக்கி நமக்கு சோறு போட போறவன் என்று அப்பா பெருமிதமாக கூற, அவன் ஒனக்கு மட்டும் புள்ள இல்லய்யா எனக்கும்தான் என்று அம்மாவும் சேர்ந்துகொண்டார். 

அதன் பிறகு வளர்ந்து பெரிய ஆளாக ஆனா பிறகு, கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பணம் இல்லை, என்னை எப்படியும் படிக்க வைத்துவிட வேண்டுமென்று அப்பா ஊரெல்லாம் கடன் கேட்டுப் பார்த்தார் ஒருத்தரும் கடந்தார முன்வரவில்லை. ஆரம்பத்தில் எனக்கும் படிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அப்பா பணத்துக்காக அலைவதை பார்த்ததும் படிக்காமல் விட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். 

அன்று பணத்துக்காக அலைந்துவிட்டு களைப்போடு வந்து திண்ணையில் அமர்ந்தார் அப்பா. 

போன காரியம் என்ன ஆச்சி? தண்ணீர் கொண்டு கொடுத்தவாறே அம்மா கேட்க,

நானும் எங்க எல்லாமும் அலஞ்சி பாத்துட்டேன் புள்ள, ஒரு  எடத்திலயும் கெடைக்கல, அதானாலதான் நெலத்த யாருகிட்டவாச்சும் அடமானம் வச்சிட்டு பணம் கேக்கலாம்னு யோசிக்கிறேன் என்று சோர்வோடு அப்பா கூறினார். 

ஏனய்யா இந்த கஷ்டத்துல இப்போ இவன படிக்க வச்சிதான் ஆவுனுமா? பேசாம வூட்டுல இருந்துட்டு போவுட்டுமே, இருக்கிற அர வீசத்தையும் அடமானம் வச்சிபுட்டா அப்புறம் கஞ்சிக்கி  யாருகிட்ட கையேந்துறது அம்மா கூற. 

என்ன புள்ள பேசுற நீ, ஒத்தபுள்ளய படிக்க வக்காம விட்டுட சொல்றிய?, அவன் படிச்சி பெரிய ஆளா ஆனா நமக்குத்தானே பெரும, படிக்க வக்கிறது பெத்தவங்க கடம, படிச்சி ஒரு நல்ல உத்தியோகத்துக்கு போனதும் புள்ள நம்மள சந்தோசமா வச்சி பாத்துக்குவான் இல்ல, என்று அப்பா சொல்லும்போதே எனது கண்களில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. 

அப்பா நான் படிக்கலப்பா, வீட்லவே இருக்கேன், உன்கூட காட்டு வேலைக்கு வரேன் என்று நான் அழுதவாறு கூறினேன். 

அப்படி எல்லாம் சொல்லகூடாது கண்ணா, என் தலைய அடமானம் வச்சாவது உன்னைய நான் படிக்க வப்பேன், நீ நல்லா படிச்சி பெரிய ஆளா வருனும், அதுதான் உன் அப்பாவோட ஆச சரியா, என்று அப்பா சொல்ல. மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்று தலையாட்டினேன். 

மறுநாளே நிலத்தை அடமானம் வைத்து பணம் கொண்டு வந்து என்னை கல்லூரியில் சேர்த்துவிட்டார், நான் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே கடுமையான நச்சுக் காய்ச்சளால் அம்மா இறந்து போனார்கள். அப்பா கூலி வேலைகள் செய்து அப்போ அப்போ எனக்கு செலவிற்கு பணம் தந்துகொண்டு இருந்தார், மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்தேன், ஒரு வருடத்தில் அவர்கள் என்னை நிரந்தர பணியாளனாக அமர்த்திவிட்டார்கள். இப்பொழுது கைநிறைய சம்பாதிக்கிறேன், அப்பாவை என்கூடவே வைத்துக்கொண்டு அவருக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்கிறேன். ஆனாலும் அப்பாவை நினைத்தால் ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு என்னை சூழ்ந்துகொள்கிறது. என்னதான் அவருக்காக நான் செய்தாலும்கூட அவரிடம் நான்பட்ட கடன்மட்டும் தீரப்போவதில்லை என்பதைத்தான் உள்மனது எப்பொழுதும் உளறிக்கொண்டே இருக்கிறது. 


---நிலாசூரியன் தச்சூர்

சனி, 21 ஜனவரி, 2023

முதல் வகுப்பு மாணவன்


 First Standard School student  N. Tharuvin. கேட்க்கும் கேள்விகளுக்கு கட கடவென சமர்த்தாக பதிலளிக்கும் முதல் வகுப்பு மாணவன் நா. தருவின்... 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சூரிய வணக்கம்

 

 

ஓ... பெரியவனே,

உயரத்தில் ஒளிர்பவனே 

உம்மை வணங்குகிறோம் 


உன் கருணையால், எங்கள் 

வாழ்க்கை செழிக்கிறது 

உமது ஒளிவிரல்களின் தழுவலினால் 

இந்த உலகம்  வெளுக்கிறது 


நீரின்றி அமையாது உலகாம் 

நீயின்றி ஏதிந்த உலகு?


மழையும் வெயிலும் 

நீ கொடுத்தாய் 

இதோ...

பாலும் பழமும் 

தேனும் தினையும்  

கரும்பும் சோறும் 

உமக்கே முதல் படையல் 


வா...


எங்கள் அறுவடைத்திருநாளின் 

அதிகார நாயகனே வா 


நானூற்றறுபதுகோடி 

ஆண்டுகளுக்குமுன்பே இந்த 

பூமியை படைத்து 

மரம்செடிகொடிமுதல் 

பல்லுயிர்த் தோன்றக் 

காரணமாய் இருந்தவனே 

நீயல்லோ எங்கள் முதல் தெய்வம் 


ஆதிபகலவனே 

அழகான கதிரவனே - எங்கள்    

வணக்கங்களை ஏற்று 

எங்கள் வாழ்வை வளப்படுத்து.


----- நிலாசூரியன் தச்சூர் 

வெள்ளி, 13 ஜனவரி, 2023

மொழி வாழ்த்து

ழகரக்காரி (தமிழ்த்தாய்)

----------------------------------------------

நாவலன் தீவில் பிறந்து
நானிலம் முழுதும் படர்ந்து
நாவிலே நல்லொலி யாகி 
பூவிலே புத்தெழில் கொண்ட
பூவையே போற்றி போற்றி

கபாட புரத்தில் இருந்து 
கண்டங்கள் பலவும் கடந்து 
பண்டங்கள் போலே நீயும் 
அண்டங்கள் அனைத்தும் கண்ட
அன்னையே போற்றி போற்றி

பஃறுளி ஆற்றில் நடந்து 
பல்கடற் கோள்களில் மிதந்து 
பாவறி வாளர் வளர்த்த 
மூவாத ழகரக் காரி 
மூத்தவளே போற்றி போற்றி

அகரத்தில் உயிர்த் தெழுந்து
ஆழத்தில் வேர் பதிந்து 
ழகரத்தில் அழகு பூண்டு
சிகரத்தில் லமர்ந்து இருக்கும்
செந்தமிழே போற்றி போற்றி. 

---- நிலாசூரியன் தச்சூர்





வியாழன், 5 ஜனவரி, 2023

பொய்யும் புரட்டும் வெல்லும்

 



பொய்யும் புரட்டும் வெல்லும் - அது
புரிதலின்றி செல்லும்
வீணாய் வாயை மெல்லும் - அது
தானாய்த் தன்னை கொல்லும்

அடுத்தவர் உழைப்பை உண்ணும் - அது
கெடுத்தவர் கையை பின்னும்
படுத்தவர் மீது நடக்கும் - அது
படித்தவர் என்றே மிடுக்கும்

தலையை ஆட்டி நடிக்கும் - அது
வலையை நீட்டி பிடிக்கும்
களையை ஊற்றி வளர்க்கும் - அது
குளையில் ஏறி மிதிக்கும்

பாலாய்ப் பல்லைக் காட்டும் - அது
வேலாய் சொல்லைத் தீட்டும்
முதுகுக்குப் பின்னால் பேசும் - அது
கதவுக்குப் பின்னால் ஏசும்

நிறத்தை அறிந்து வாழ்வோம் - தமிழ்
அறத்தை அறிந்து வாழ்வோம்
சிரத்தை அறிந்து உய்வோம் - துணிந்து
சிறுமையின் தலையைக் கொய்வோம்.



                 --- நிலாசூரியன் தச்சூர்

நன்றியைக் கொல்வான் மனிதன்

 


நன்றியைக் கொல்வான் மனிதன் 

மனிதனின் உயிர் 
மரம்போட்ட பிச்சை 

இங்கு பலருக்கும்
புரியவில்லை
உழைப்பிற்கு மிஞ்சிய
வருமானம் பணமல்ல பாவமென்று...

பாவம் பலவகைபட்டாலும்
அத்தனைப் பாவங்களையும்
இந்த ஞாலத்தில்
மனிதன் மட்டுமே செய்கிறான்

முல்லைக்குத் தேரையும்
மயிலுக்கு போர்வையும்
கொடுத்து மனிதம் உயர்ந்து நின்ற
மரபு மரித்துபோய்விட்டது

இன்று மனிதனைவிட
விலங்குகளே பரவாயில்லை
என்றாகிவிட்டது

ஒட்டுமொத்தமாக
தன்னை மற்றவர்களுக்கே
அர்ப்பணித்து கொண்ட
மரத்தின் தியாகத்திற்கு முன்பு;
மனிதனும் கடவுளும் எம்மாத்திரம்?

நல்ல நேரம் பார்த்துதான்
சுவாசிக்கும் காற்றை
வெளியிடுவேன் என்று
மரமே நிபந்தனை
விதிக்காதபோது - எந்த ஒரு
செயலுக்கும் நேர காலம் பார்க்க,
"கேபலம்"
மனிதனுக்கென்ன
அருகதை இருக்கிறது?

உன்ண உணவும்
குடிக்க நீரும்
சுவாசிக்க காற்றும்
இளைப்பாற நிழலும்
மரம் தருகிறபோது
கல்லை கடவுளென்பது
எத்தனை முட்டாள்தனம்

பாவத்தில் கூட
பங்குதர யோசிக்கும்
சுயநல மனிதன்,
புண்ணியத்திலா
கண்ணியத்தை
காட்டப்போகிறான்

ஓட்டம் ஒடுங்கி
ஆட்டம் அடங்கி
கடைசி கட்டத்தில்கூட
தன்னை எரிப்பதற்கு
ஒரு மரத்தின் உதவி
அவசியம் என்பதை
உணராத ஜென்மங்கள்
இந்த மண்ணில்
அவதரித்த மகாப் பாவிகள்..!


---- நிலாசூரியன் தச்சூர்