சனி, 4 பிப்ரவரி, 2023

அப்பா பாசம் (சிறுகதை)

அப்பா பாசம் (சிறுகதை)

---------+++++++-----------

''அப்பாவ பற்றி சொல்வதற்கு  நிறைய இருக்கிறது.   ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன  செய்வாரோ  அதைவிட கூடுதலாகவே அப்பா எனக்கு செய்து இருக்கிறார், அவர் எனக்காக செய்ததை எல்லாம் கூற முற்பட்டால் இது நெடுங்கதையாகிவிடும் என்பதனால் ஒரு சிறு சம்பவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.''

அன்று ஒருநாள் கடுமையான பசி.

அம்மா பசிக்கிது சோறு போடு என்றவாறே 

அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு அழுதேன். 

இருசாமி  அப்பா வந்துடட்டும் அப்புறமா சாப்புடலாம், என்று அம்மா கூற. 

போங்க எனக்கு பசிக்கிது, இப்பவே வேணும் என்று அடம்பிடித்தேன். 

சொன்னா கேளு ராசா, இப்ப  அப்பா வந்துடுவாங்க எல்லோரும் சேர்ந்து சாப்புடலாம் என்ன, அம்மா சமாதானம் கூறினார். 

உச்சிவெயில் மண்டையை பிளக்க, எங்கு பார்த்தாலும் ஒரே வெக்கையாக இருந்தது. காற்றை காணவில்லை, மரம் மட்டைகள் எல்லாம் மந்திருத்துவிட்டாற்போல் அசைவற்று இருந்தன. 

அப்பாவின் உடம்பில்மட்டும் வியர்வை ஊற்றாய் சுரந்து, இடுப்பில் சுற்றியிருந்த இருமுழ துண்டையும் நனைத்து பாதம்வழியாக பூமியில் இறங்கிகொண்டு இருந்தது. 

அங்க போகாதப்பா பூச்சிப் புழு கெடக்கும் என்று அம்மா சொல்வதை காதில்போட்டுக் கொள்ளாமல், வேப்ப மரத்தடியில் இருந்து வயலுக்கு ஓடினேன், அப்பா.... அப்பா... என்று கூவி அழைத்தேன். 

ஏரை நிறுத்திவிட்டு என்னடா கண்ணா என்று அப்பா கேட்டார். 

அப்பா பசிக்கிதுப்பா வாப்பா சாப்புட, நீ வந்தாதான் சாப்புடணும்னு அம்மா சொல்லிச்சி. 

இருடா கண்ணா, இந்த ஒரு விளாவமட்டும் தேச்சிபுட்டு வந்துடுறேன்.

போங்க எனக்கு பசிக்கிது,,, என்று கூறியவாறே அழுதேன். 

அடடா... அழாதடா இந்தா வரேன், என்றவாறே ஏரை நிறுத்திவிட்டு வாய்க்காலில் தேங்கிக்கிடந்த குட்டை நீரில் கையையும் காலையும் கழுவிக்கொண்டு அப்பா வந்தார். 

எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது, அம்மா சோறுபோடு அப்பா வராரு என்றேன். 

சரி சரி நீ இங்க வந்து ஒக்காரு போடுறேன் என்று கூறியவரே அம்மா தட்டில் சோறுபோட்டு, நேத்து வச்ச அசரமீன்  கொழம்ப ஊத்தி அப்பாவுக்கு கொடுக்க, அப்பா அதை வேகமாக பிசைந்து முதல் கவாளத்தை எனக்கு தந்தார். 

அதுக்காகத்தான் காத்துக்கொண்டே இருந்ததைப்போல நான் வேகமாக வாங்கிகொண்டேன். அவனுக்கு நான் தரேன் நீ சாப்புடுய்யா என்று அம்மா கூற. சும்மா இருடி, புள்ள பசியில தவிச்சிபோயிட்டான், அவனவிடவா நமக்கு சோறு முக்கியம்? என்றவாறே அடுத்த கவாளத்தை கையில் வைத்தார். 

அப்பா நீயும் சாப்டுப்பா என்றேன், 

நீ சாப்டு ராசா நான் அப்புறமா சாப்புடுறேன் என்று அப்பா கூற. 

போ, நீ சாப்புட்டாத்தான் நான் சாப்புடுவேன் என்றேன். 

பாத்தியாடி என் புள்ளைய, இவந்தாண்டி நாளைக்கி நமக்கு சோறு போட போறவன் என்று அப்பா பெருமிதமாக கூற, அவன் ஒனக்கு மட்டும் புள்ள இல்லய்யா எனக்கும்தான் என்று அம்மாவும் சேர்ந்துகொண்டார். 

அதன் பிறகு வளர்ந்து பெரிய ஆளாக ஆனா பிறகு, கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பணம் இல்லை, என்னை எப்படியும் படிக்க வைத்துவிட வேண்டுமென்று அப்பா ஊரெல்லாம் கடன் கேட்டுப் பார்த்தார் ஒருத்தரும் கடந்தார முன்வரவில்லை. ஆரம்பத்தில் எனக்கும் படிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அப்பா பணத்துக்காக அலைவதை பார்த்ததும் படிக்காமல் விட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். 

அன்று பணத்துக்காக அலைந்துவிட்டு களைப்போடு வந்து திண்ணையில் அமர்ந்தார் அப்பா. 

போன காரியம் என்ன ஆச்சி? தண்ணீர் கொண்டு கொடுத்தவாறே அம்மா கேட்க,

நானும் எங்க எல்லாமும் அலஞ்சி பாத்துட்டேன் புள்ள, ஒரு  எடத்திலயும் கெடைக்கல, அதானாலதான் நெலத்த யாருகிட்டவாச்சும் அடமானம் வச்சிட்டு பணம் கேக்கலாம்னு யோசிக்கிறேன் என்று சோர்வோடு அப்பா கூறினார். 

ஏனய்யா இந்த கஷ்டத்துல இப்போ இவன படிக்க வச்சிதான் ஆவுனுமா? பேசாம வூட்டுல இருந்துட்டு போவுட்டுமே, இருக்கிற அர வீசத்தையும் அடமானம் வச்சிபுட்டா அப்புறம் கஞ்சிக்கி  யாருகிட்ட கையேந்துறது அம்மா கூற. 

என்ன புள்ள பேசுற நீ, ஒத்தபுள்ளய படிக்க வக்காம விட்டுட சொல்றிய?, அவன் படிச்சி பெரிய ஆளா ஆனா நமக்குத்தானே பெரும, படிக்க வக்கிறது பெத்தவங்க கடம, படிச்சி ஒரு நல்ல உத்தியோகத்துக்கு போனதும் புள்ள நம்மள சந்தோசமா வச்சி பாத்துக்குவான் இல்ல, என்று அப்பா சொல்லும்போதே எனது கண்களில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. 

அப்பா நான் படிக்கலப்பா, வீட்லவே இருக்கேன், உன்கூட காட்டு வேலைக்கு வரேன் என்று நான் அழுதவாறு கூறினேன். 

அப்படி எல்லாம் சொல்லகூடாது கண்ணா, என் தலைய அடமானம் வச்சாவது உன்னைய நான் படிக்க வப்பேன், நீ நல்லா படிச்சி பெரிய ஆளா வருனும், அதுதான் உன் அப்பாவோட ஆச சரியா, என்று அப்பா சொல்ல. மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்று தலையாட்டினேன். 

மறுநாளே நிலத்தை அடமானம் வைத்து பணம் கொண்டு வந்து என்னை கல்லூரியில் சேர்த்துவிட்டார், நான் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே கடுமையான நச்சுக் காய்ச்சளால் அம்மா இறந்து போனார்கள். அப்பா கூலி வேலைகள் செய்து அப்போ அப்போ எனக்கு செலவிற்கு பணம் தந்துகொண்டு இருந்தார், மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்தேன், ஒரு வருடத்தில் அவர்கள் என்னை நிரந்தர பணியாளனாக அமர்த்திவிட்டார்கள். இப்பொழுது கைநிறைய சம்பாதிக்கிறேன், அப்பாவை என்கூடவே வைத்துக்கொண்டு அவருக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்கிறேன். ஆனாலும் அப்பாவை நினைத்தால் ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு என்னை சூழ்ந்துகொள்கிறது. என்னதான் அவருக்காக நான் செய்தாலும்கூட அவரிடம் நான்பட்ட கடன்மட்டும் தீரப்போவதில்லை என்பதைத்தான் உள்மனது எப்பொழுதும் உளறிக்கொண்டே இருக்கிறது. 


---நிலாசூரியன் தச்சூர்