சனி, 21 ஜனவரி, 2023

முதல் வகுப்பு மாணவன்


 First Standard School student  N. Tharuvin. கேட்க்கும் கேள்விகளுக்கு கட கடவென சமர்த்தாக பதிலளிக்கும் முதல் வகுப்பு மாணவன் நா. தருவின்... 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சூரிய வணக்கம்

 

 

ஓ... பெரியவனே,

உயரத்தில் ஒளிர்பவனே 

உம்மை வணங்குகிறோம் 


உன் கருணையால், எங்கள் 

வாழ்க்கை செழிக்கிறது 

உமது ஒளிவிரல்களின் தழுவலினால் 

இந்த உலகம்  வெளுக்கிறது 


நீரின்றி அமையாது உலகாம் 

நீயின்றி ஏதிந்த உலகு?


மழையும் வெயிலும் 

நீ கொடுத்தாய் 

இதோ...

பாலும் பழமும் 

தேனும் தினையும்  

கரும்பும் சோறும் 

உமக்கே முதல் படையல் 


வா...


எங்கள் அறுவடைத்திருநாளின் 

அதிகார நாயகனே வா 


நானூற்றறுபதுகோடி 

ஆண்டுகளுக்குமுன்பே இந்த 

பூமியை படைத்து 

மரம்செடிகொடிமுதல் 

பல்லுயிர்த் தோன்றக் 

காரணமாய் இருந்தவனே 

நீயல்லோ எங்கள் முதல் தெய்வம் 


ஆதிபகலவனே 

அழகான கதிரவனே - எங்கள்    

வணக்கங்களை ஏற்று 

எங்கள் வாழ்வை வளப்படுத்து.


----- நிலாசூரியன் தச்சூர் 

வெள்ளி, 13 ஜனவரி, 2023

மொழி வாழ்த்து

ழகரக்காரி (தமிழ்த்தாய்)

----------------------------------------------

நாவலன் தீவில் பிறந்து
நானிலம் முழுதும் படர்ந்து
நாவிலே நல்லொலி யாகி 
பூவிலே புத்தெழில் கொண்ட
பூவையே போற்றி போற்றி

கபாட புரத்தில் இருந்து 
கண்டங்கள் பலவும் கடந்து 
பண்டங்கள் போலே நீயும் 
அண்டங்கள் அனைத்தும் கண்ட
அன்னையே போற்றி போற்றி

பஃறுளி ஆற்றில் நடந்து 
பல்கடற் கோள்களில் மிதந்து 
பாவறி வாளர் வளர்த்த 
மூவாத ழகரக் காரி 
மூத்தவளே போற்றி போற்றி

அகரத்தில் உயிர்த் தெழுந்து
ஆழத்தில் வேர் பதிந்து 
ழகரத்தில் அழகு பூண்டு
சிகரத்தில் லமர்ந்து இருக்கும்
செந்தமிழே போற்றி போற்றி. 

---- நிலாசூரியன் தச்சூர்





வியாழன், 5 ஜனவரி, 2023

பொய்யும் புரட்டும் வெல்லும்

 



பொய்யும் புரட்டும் வெல்லும் - அது
புரிதலின்றி செல்லும்
வீணாய் வாயை மெல்லும் - அது
தானாய்த் தன்னை கொல்லும்

அடுத்தவர் உழைப்பை உண்ணும் - அது
கெடுத்தவர் கையை பின்னும்
படுத்தவர் மீது நடக்கும் - அது
படித்தவர் என்றே மிடுக்கும்

தலையை ஆட்டி நடிக்கும் - அது
வலையை நீட்டி பிடிக்கும்
களையை ஊற்றி வளர்க்கும் - அது
குளையில் ஏறி மிதிக்கும்

பாலாய்ப் பல்லைக் காட்டும் - அது
வேலாய் சொல்லைத் தீட்டும்
முதுகுக்குப் பின்னால் பேசும் - அது
கதவுக்குப் பின்னால் ஏசும்

நிறத்தை அறிந்து வாழ்வோம் - தமிழ்
அறத்தை அறிந்து வாழ்வோம்
சிரத்தை அறிந்து உய்வோம் - துணிந்து
சிறுமையின் தலையைக் கொய்வோம்.



                 --- நிலாசூரியன் தச்சூர்

நன்றியைக் கொல்வான் மனிதன்

 


நன்றியைக் கொல்வான் மனிதன் 

மனிதனின் உயிர் 
மரம்போட்ட பிச்சை 

இங்கு பலருக்கும்
புரியவில்லை
உழைப்பிற்கு மிஞ்சிய
வருமானம் பணமல்ல பாவமென்று...

பாவம் பலவகைபட்டாலும்
அத்தனைப் பாவங்களையும்
இந்த ஞாலத்தில்
மனிதன் மட்டுமே செய்கிறான்

முல்லைக்குத் தேரையும்
மயிலுக்கு போர்வையும்
கொடுத்து மனிதம் உயர்ந்து நின்ற
மரபு மரித்துபோய்விட்டது

இன்று மனிதனைவிட
விலங்குகளே பரவாயில்லை
என்றாகிவிட்டது

ஒட்டுமொத்தமாக
தன்னை மற்றவர்களுக்கே
அர்ப்பணித்து கொண்ட
மரத்தின் தியாகத்திற்கு முன்பு;
மனிதனும் கடவுளும் எம்மாத்திரம்?

நல்ல நேரம் பார்த்துதான்
சுவாசிக்கும் காற்றை
வெளியிடுவேன் என்று
மரமே நிபந்தனை
விதிக்காதபோது - எந்த ஒரு
செயலுக்கும் நேர காலம் பார்க்க,
"கேபலம்"
மனிதனுக்கென்ன
அருகதை இருக்கிறது?

உன்ண உணவும்
குடிக்க நீரும்
சுவாசிக்க காற்றும்
இளைப்பாற நிழலும்
மரம் தருகிறபோது
கல்லை கடவுளென்பது
எத்தனை முட்டாள்தனம்

பாவத்தில் கூட
பங்குதர யோசிக்கும்
சுயநல மனிதன்,
புண்ணியத்திலா
கண்ணியத்தை
காட்டப்போகிறான்

ஓட்டம் ஒடுங்கி
ஆட்டம் அடங்கி
கடைசி கட்டத்தில்கூட
தன்னை எரிப்பதற்கு
ஒரு மரத்தின் உதவி
அவசியம் என்பதை
உணராத ஜென்மங்கள்
இந்த மண்ணில்
அவதரித்த மகாப் பாவிகள்..!


---- நிலாசூரியன் தச்சூர்