புதன், 21 பிப்ரவரி, 2024

எங்கும் தமிழை விதைப்பேன்

 


தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்

ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்கு தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்

என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும் தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்

பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழே தனிச்சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்

சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் என்பேன்

எழில்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பேரெழில் நிறைந்தது என்பேன்
இலக்கியம் கொண்டது தமிழாம் - பல் 
இலக்கணம் தந்ததும் அதுதான் என்பேன்

குன்றிலேறி உரைப்பேன் - என்
தமிழே வாழ்க வென்று
குறும்பா நெடும்பா தொடுப்பேன் - என் 
தமிழே உயர்ந்தது என்று 

நாற்றிசைகளும் ஒலிக்கும் - என்
தமிழே என்றும் நிலைக்கும்
இவ்வுலகம் அழிந்தால்கூட - அது
இன்னொரு உலகம் படைக்கும். 

              ---- நிலாசூரியன் தச்சூர்