வெள்ளி, 12 ஏப்ரல், 2024

TNCSC கணினிப் பணியாளர்களின் வாழ்நிலை பற்றிய நூல் எழுதும் முயற்சி

 


RTI மூலம் கேட்கப்பட்ட 36 கேள்விகளுக்கும் முறையான பதில் அளிக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் சொதப்பலான பதிலை அளித்து நீதிக்கு புறம்பாய் நடந்துகொண்ட  TNCSC தலைமை அலுவலக பொதுத்தகவல் அலுவலருக்கு சரியான பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. 30 நாட்களுக்குள் வழங்கவேண்டிய தகவல்களை மேல் முறையீடு செய்த பிறகும்கூட காலம் கடத்தி வழங்கியதும் அதற்கு ஆதாரமே வழங்காமல் முதலில் அனுப்பப்பட்ட தகவல் முகவரி தவறென்று திரும்ப வந்து விட்டதாகவும் சப்பகட்டு கட்டப்பட்ட பொதுதகவல் அலுவலரின் கூற்று ஏற்புடையதாக இல்லை. TNCSC பொதுதகவல் அலுவலரின் செயல்பாடுகள் நான் மேல்முறையீட்டுக்கு போகக்கூடாது தகவல் ஆணையத்திற்கு போகமுடியாமல் தினற வேண்டும் என்பதற்காகவே காலம் கடத்தப்பட்தாக என்னால் விளங்கிக்கொள்ள முடிகிற  அதே வேளையில் கணினிப் பணியாளர்களை கசக்கி புழிந்து மிரட்டி உருட்டி ஏமாற்றி வேலை வாங்கிக் கொள்கிற மோசமான மற்றும் கீழ்த்தரமான சிந்தனை கொண்ட அதிகாரிகள் இருக்கும் இந்த கார்ப்பரேட் நிறுவனத்திடமே 15 பக்கங்கள் தட்டச்சு (டைப்பிங்) செய்ய வைத்து அவர்களிடமே நான் வேலை வாங்கி இருக்கிறேன் என்றால் சட்டம் நமக்கு துணை இருக்கிறது என்றுதானே அர்த்தம். அந்த சட்டத்தை வைத்தே இன்னும் பல தகவல்களை RTI மூலம் மீண்டும் மீண்டும்  பொதுதகவல் அலுவலரிடம் இருந்து கறந்து,  நான் எழுத இருக்கும் "கணினிப் பணியாளர்களின் கண்ணீர் கதை" என்ற நூலுக்கு தேவையான விடயங்களை சேகரித்துக்கொள்ள என்னால் முடியும். 15 ஆண்டுகளாக எந்தவித சலுகைகளும் இல்லாமல் கொடிய ஒப்பந்தத்தின் மூலம் கொத்தடிமைகளைப்போல் வேலை செய்துகொண்டு இருக்கும் கணினிப் பணியாளர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை வெளியுலகம் அறிந்துகொள்ளும் ஆவணமாக எனது நூல் இருப்பதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் யாரும் பாதிக்கப்படாமல் கணினிப் பணியாளர்களுக்கு கடுகளவேனும் நன்மை நடக்குமெனில் அதுவே என் எழுத்துக்கு கிடைக்கும் மகுடமாகும். இந்த நாட்டில் கணினிப் பணியாளர்கள் இப்படியெல்லாம் துயரப்பட்டு வாழ்ந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது, எழுத்துக்கள்தான் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் மிகப் பெரியச் சான்று. 


ஒரு பொருப்புள்ள சமூக ஊடக எழுத்தாளனாக நான் கண்ணால் பார்த்த காதால் கேட்ட மேலும் பல்வேறு மாவட்ட எழுத்தாளர்கள்  மற்றும் தோழர்களிடம்  விசாரித்து அறிந்துகொண்ட செய்திகளை ஒன்று திரட்டி நூலாக்க முயன்று வருகிறேன். எனது நூலுக்கு தேவையான  செய்திகள் உள்ளவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும் தாங்கள் அனுபவிக்கும் நன்மை தீமைகளையும் jnsamythamil@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளலாம், தங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும். 

 ஊதிய உயர்வும் பணி நிரந்தரமுமே  கணினிப் பணியாளர்களின் கண்ணீரைத் துடைக்க நிரந்தர வழி என்பதை வலியுறுத்தி தொடர்ந்து பல கருத்துக்களை சமூக ஊடகங்களில்  நான் பதிவிட்டு வருகிறேன் அந்த வகையில் கணினிப் பணியாளர்களின் பணி நிரந்திரத்திற்காக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு அமைச்சர் அவர்களுக்கும் பொதுமேலாளர் அவர்களுக்கும் என்னால் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. இது அடுத்தகட்ட நகர்வாகும். 


---- நிலாசூரியன் தச்சூர். 
சமூக ஊடக முற்போக்கு எழுத்தாளர்
கடலூர் மாவட்டம் மேற்கு 

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

இது தேர்தல் காலம்

 


ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை இந்திய அரசியல் அமைப்பு வழங்கி இருக்கிறது. வாக்களிக்கும் உரிமையை பெற்ற ஓர் இந்தியக் குடிமகனாக நான் எனது கருத்துக்களை கூறுகிறேன், இதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கும் முரண்படுவதற்கும் வாக்காளர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. 


டிஜிட்டல் இந்தியா என்று சொன்னீர்கள், அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமானது, ரேசன் அட்டை ஸ்மார்ட் கார்டு ஆனது, அனைத்து வேலைகளும் கணினிமயமாகி முழு இணையதள மயமானதால் எந்த ஒரு சிறு வேலைக்கும் கடவுச்சொல் கடவுஎண் என்ற நடைமுறை தவிர்க்க இயலாததாகிவிட்டது, அதனால் கைப்பேசி அனைவருக்கும் கட்டாயமாகிப்போனது. 

வீட்டில் அரிசி இருக்கிறதோ இல்லையோ... கடனை உடனை வாங்கி மாதம் இருநூறு முன்னூறுக்கு கைப்பேசி இணைப்பை நாம் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறோம், இதனால் செல்போன் சிம்கார்டு இணையதள இணைப்பு போன்றவற்றை விற்பனை செய்கிற தனியார் நிறுவனங்கள் தாராளமாக நமது உழைப்பை சுரண்டித் தின்று கொழுத்துக்கொண்டு இருக்கின்றன. 

இது ஒருபுறம் இருக்க... தேர்தல் முறையும் டிஜிட்டல் மயமாகி வருகிறது, (EVM) என்று சொல்லக்கூடிய எலக்ட்ரானிக் வோட்டர் மெஷின் அதாவது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதற்காக தேர்தல் ஆணையம் பல கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. வாக்காளர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெகு தொலைவு நகரங்களில் இருந்தும் தொடர் வண்டி பேருந்து போன்ற வாகனங்களில் இடிபாடுகளுக்கு இடையில் மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தோடு தங்கள் சொந்த கிராமத்திற்குச் சென்று அங்கு வாக்குச் சாவடிகளில் கால்கடுக்க மணிக்கணக்கில் நின்று வாக்களித்து தங்கள் ஐனநாயக கடமையை ஆற்றுகிறார்கள். 

இதன் பிறகுதான் வாக்கு பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்களை எல்லாம் இயந்திர வண்டியில் ஏற்றிச் சென்று அவைகளை எல்லாம் ஓர் இடத்தில் வைத்து அதற்கு நான்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு உண்டாக்கி சில நாட்கள் கழித்து தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தல் நடைமுறையில் EVM இயந்திரத்தை கைவிட மறுக்கும் தேர்தல் ஆணையம் EVM இயந்திர தேர்தல் முறையை முழு டிஜிட்டல் மயம் ஆக்கினால் என்ன என்பதுதான் எனது கேள்வி, ஏனெனில் EVM இயந்திர வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக பலரும் கருதுகிறார்கள், அப்படி இருக்கும் சூழலில் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தங்கள் மீது முழு நம்பிக்கையை வரவைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். 

விரும்பவில்லை என்றாலும்கூட இந்த டிஜிட்டல் இந்தியாவில்தான் நாம் எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது அதனால் EVM இயந்திர வாக்களிப்பு முறைக்கு இன்னும் அப்பாற்பட்டு அது முழு டிஜிட்டல் மயம் ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைவரும் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே தங்கள் கைப்பேசி அல்லது கணினி மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் உருவாக்கி தருமேயானால் தேர்தல் நடத்துவதற்கான சிரமங்களும் செலவுகளும் மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது மேலும் வாக்காளர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் வெகுவாக குறையும் என்று நான் நம்புகிறேன். இதில் விரைவாக தேர்தல் முடிவுகளை வெளியிடுவதோடு வெளிப்படைத் தன்மையையும் தேர்தல் ஆணையத்தால் உறுதிசெய்ய முடியும். அதோடில்லாமல்
இது தேர்தல் நடைமுறையில் மாபெரும் புரட்சியாகவும்  அடுத்தகட்ட நகர்வாகவும் அமைய வாய்பிருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். 

----- நிலாசூரியன் தச்சூர். 


புதன், 21 பிப்ரவரி, 2024

எங்கும் தமிழை விதைப்பேன்

 


தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்

ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்கு தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்

என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும் தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்

பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழே தனிச்சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்

சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் என்பேன்

எழில்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பேரெழில் நிறைந்தது என்பேன்
இலக்கியம் கொண்டது தமிழாம் - பல் 
இலக்கணம் தந்ததும் அதுதான் என்பேன்

குன்றிலேறி உரைப்பேன் - என்
தமிழே வாழ்க வென்று
குறும்பா நெடும்பா தொடுப்பேன் - என் 
தமிழே உயர்ந்தது என்று 

நாற்றிசைகளும் ஒலிக்கும் - என்
தமிழே என்றும் நிலைக்கும்
இவ்வுலகம் அழிந்தால்கூட - அது
இன்னொரு உலகம் படைக்கும். 

              ---- நிலாசூரியன் தச்சூர்