புதன், 17 ஏப்ரல், 2013

உரிமையை உயிராய் சுமந்தவன்

மறத்தமிழ் மரபில் தோன்றி
வேங்கையாய் களத்தில் குதித்தே
விடுதலை யில்லா வாழ்வோ
வேண்டாமே எமக்கு என்றான்...

 

அரக்கர்களின் ஆளு மைக்கே
அடிபணியாத் தமிழ னென்றே
இன்னுயிரை துச்ச மென்றே
இறுதிவரை களத்தை கண்டான்... 

 

அடிமைக்கும் உரிமை வேண்டி
அயராது போர்க் களமாடி
தமிழ் ழென்ற மந்திரத்தை
தன்நெஞ்சில் சுமந்தே வாழ்ந்தான்...

 

வாய்மொழி சவடா ளெல்லாம்
அடியோடே அழித் தொழித்து
செயல்களில் வீரம் காட்டி
செந்தமிழன் சரித்திர முரைத்தான்...

 

துயரங்கள் சூழ்ந்த போதும்
துவன் டவன் போனதுமில்லை
தான்கொண்ட கொள்கை தனிலே
தன்னலமாய் வாழ்ந்ததும் மில்லை...

 

சேறள்ளி வீசிடும் இங்கே
கருமந்திச் சாட லுக்குச்
செவி யவன் சாப்பதுமில்லை
செருக் கவன் கொண்டதுமில்லை...

 

வஞ்சகன் வீசிய ஈட்டி
நெஞ்சத்தில் தைத் திருந்தாலும்
நெஞ்சுரம் வீழ்ந்ததும் மில்லை
அவன்கரம் சோர்ந்ததும் மில்லை...

 

பூவுலக படைக ளெல்லாம்
புலிகளின் முன்னால்த் தோற்கும்
என்றவன் சூளு ரைத்தே
எதிரியை எதிர்த்தே நடந்தான்...

 

குன்றிலே குதிக்கும் காற்று
அவன்பெயர் சொன்னா லடங்கும்
வன்னிக் காட்டு மரங்கள்
அவனையே நாளும் வணங்கும்...

 

வரலாற்று நாயக னவனே

நாளைய சரித்திரம் சொல்லும்
இன்றவனை தூற்றும் நாவுகள்
பின்னாளில் காணாப் போகும்...!!! 

         ---------- நிலாசூரியன்.