சனி, 11 செப்டம்பர், 2021

 


அரைநூற்றாண்டை நோக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். 


''பசியோடு ஒருவன் வாட பார்த்து இனி இருக்கும் கீழ்மை!'' என்று  இராவண காவியத்திலே பகுத்தறிவு புலவர் குழந்தை அவர்கள் குறிப்பிட்டதை போல், இந்த உலகத்தில் வீடு, வாசல், பொன், பொருள் எதுவுமே இல்லாமல் உயிர் வாழ்ந்துவிடலாம், ஆனால் ஒருசான் வயிற்றுகு ஒருபிடி உணவின்றி ஒருவராலும் உயிர்வாழ முடியாது.

உணவுத்துறை என்பது நாட்டிலே மிகவும் முக்கியமான ஓர் துறை, இந்த துறையை கருததில் கொண்டுதான் அரசியல் தலைவர்கள், உணவுப்பொருள் இலவசங்களை அறிவித்து மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார்கள், பேரிடர் காலங்களிலும், பண்டிகை காலங்களிலும் இலவச தொகுப்புகளை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

உணவப்பொருள் வழங்கல்துறையிலேயே மிகவும் முக்கியமானத்துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துறை ஆகும். மக்களின் பசிப்பிணியை போக்க இந்தத் துறை 1972 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது, எனவேதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தந்தை என்று இவர் போற்றப்படுகிறார், இந்த நுகர்பொருள் வாணிபக் கழகம் உணவுத்துறை அமைச்சர் அவர்களை கழகத்தின் தலைவராக கொண்டு இயங்கி வருகிறது.

தற்பொழுது நடந்து முடிந்த மானியக் கோரிக்கை எண் 13  ல், தமிழ்நாட்டில் குடிமக்கள் எவரும் பட்டினியுடன் உறங்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கிற கொள்கையில் தமிழக அரசு முழு முனைப்புடன் உறுதியாக உள்ளது என்று மதிப்பிற்குரிய உணவுத்துறை அமைச்சர் அவர்கள் முடிவுரையிலே அழுத்தமாக கூறி இருக்கிறார்கள், அவரை வாழ்த்தி  அரசை வணங்குகிறேன்.

மானியக்கோரிக்கை எண் 13 ல், கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது,  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 ன் படி இந்திய உணவுத்துறையின் மூலம் ஒன்றிய அரசு தொகுப்பு ஒதுக்கீட்டிலிருந்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் அரவை செய்து பெறப்படும் அரிசியும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்கும் அரிசியும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்டு, ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய்க்கு மேல் காசும் வழங்கப்படுகிறது, அவர்கள் நியாயவிலை கடைகள் மூலம் உணவுப்பொருளை மக்களிடம் சேர்க்கின்றார்கள், மேலும் அவர்கள் பொன் அடகு பிடிப்பது, வட்டிக்கு லோன் வழங்குவது, உணவுத் தாணியங்களை விவசாயிகளிடம் நேரடியாக தருவித்து விற்பனை செய்வது போன்ற காரணங்களால் அத்துறை இலாபகரமாக  இயங்கலாம், ஆனால், நுகர்பொருள் வாணிபக் கழகம் நூறு சதவீதம் மக்கள் சேவைக்காக இயங்கும் ஒரு பொது நிறுவனம் ஆகும், மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களால் ஈன்றெடுக்கப்பட்டு இத்தனை ஆண்டு காலம் தன்னிச்சையாய் தலைநிமிர்ந்து மக்கள் சேவையாற்றி வந்த நுகர்பொருள் வாணிபக் கழகம் வருவாய்த்துறையின் கீழும், கூட்டுறவுத்துறையுடனும் இணைக்கப்படுமேயானால், அதை  அத்துனை சிறப்பான விடயமென்று விளம்பிவிட இயலாது, ஏனெனில் காலம்காலமாக நுகர்பொருள் வாணிபக்கழகம் செம்மையாக செயலாற்றி வருகிறது, கூட்டுறவுத்துறை மரம், இலை, பூ, காய் என கவர்ந்து இழுத்தாலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்தான் உணவுத்துறைக்கு வேர் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ் நாட்டில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு மொத்தம் 296 சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன, இதில் அலுவலகப் பணியாளர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், கணினிப் பணியளர்கள் என்று ஒரு கிடங்கிற்கு குறைந்தது 35 நபர்கள் தினமும் பணி செய்துகொண்டு இருக்கிறார்கள், தமிழ் நாடு முழுவதும் தினமும் 10.360 நபர்கள் பணிபுரிகின்றனர், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் கொரோனா கொடுந்தொற்று காலங்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து கொண்டு இருக்கிறார்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நாளொன்றுக்கு குறைந்தது பத்து வாகனங்கள் வந்து செல்கின்றன, இதனால் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு மேலோங்கி நிற்கிறது,  இவர்கள் தொடர்ந்து பணி செய்தால் மட்டுமே நியாயவிலை கடைகளுக்கு உணவுப்பொருட்கள் போய் சேரும் என்கிற நிலை இருப்பதால், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் களத்தில் நின்று களப்பணியாற்றி வருகிறார்கள், ஆனாலும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பதற்கு அரசு ஏனோத் தயங்குகிறது, இதற்கு இந்த துறை அமைச்சர் ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா என்று ஆவலுடன்  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பணிக்காலத்தில் காலமான 34 நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கி இருப்பது வரவேற்க தக்கது, அதுபோன்று  பன்னிரண்டு  ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்ற கணினிப் பணியளர்களின்  வாழ்க்கை மிகவும் நலிந்து கேள்விக்குறியாகி இருக்கிறது, இவர்கள்  கருணை அடிப்படையில் பணி நிரந்தரம் வேண்டி, தங்கள் குமுறல்களை கோரிக்கை மனுக்களாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பி கொண்டு இருக்கிறார்கள், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலும் அரவை ஆலைகளிலும் நானூறுக்கும் மேற்பட்ட கணினிப் பணியாளர்கள் பல்லாண்டு காலமாக பணியாற்றி வருகிறார்கள், அனைத்து வேலைகளும் கணினிமயமாக்கப்பட்டு அதுவும் இணையதள பணிமயமாக்கப்பட்ட நிலையிலும், கொரோனா பேரலையிலும், மிகுந்த பணிச்சுமைக்கு ஆளாகி இருக்கும்  இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கினால் அதனால் வாழ்வாதாரம் பெறும்  நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களும்  என்றென்றும் இந்த அரசுக்கு விசுவாசமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஐம்பதாவது ஆண்டை நோக்கி வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தொடர்ந்து சிறப்பாக  செயல்பட்டு மக்கள்சேவையாற்றும்  என்று நம்புவோம்.


நிலாசூரியன் தச்சூர் 
சமூக ஊடக எழுத்தாளர் 
கடலூர் மாவட்டம்  மேற்கு