சனி, 28 அக்டோபர், 2023

ஆண் பெண் இயற்கை


 ஆண், பெண் என்பது இயற்கையின் உருவாக்கமே தவிர! அதை யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. 

ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் அனைத்திலும் ஆண் பெண் என்ற இருக்கூறுகள் இருக்கின்றன, அவைகள் அனைத்தும் தன் இணையோடு இணைந்து வாழ்கின்றன, ஆண் பெண் இணைந்த வாழ்க்கை என்பது மன விருப்ப நகர்வாக இருக்க வேண்டும் என்பது மிக அவசியம், ஆனால்! ஒருசில இணையருக்குள் ஏற்படும் மனகசப்பையும் முரண்பாடுகளையும் வைத்து ஆண் பெண் இணைந்த வாழ்க்கையே பெண்ணிய விடுதலைக்கு எதிரானது என்று முடிவு கட்டிவிட முடியாது. விலங்குகள் பெண் விலங்குகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வாழாதபோது, மனித இனத்திற்குள் மட்டும் இந்த ஆணாதிக்கம் என்ற இழிவான பண்பு எப்படி வந்தது என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும். என்றைக்கோ யாராலோ உருவாக்கப்பட்ட  சில ஆணாதிக்க உளவியல் கோட்பாடுகள்தான், இன்றைய ஆண்களையும் வழிநடத்துகிறது, அதுவே ஆணாதிக்க உளவியல் தொடர்வதற்கு முக்கிய காரணமாகவும்  இருக்கிறது என்றால் அதை மறுப்பதற்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

பிள்ளைப்பேறு என்பது இயற்கை பெண்களுக்கு மட்டுமே வழங்கிய பெறும்பேறு என்றே நான் கருதுகிறேன், விலங்குகளில் கூட பெண் விலங்குகளுக்குத்தான் பிள்ளைப்பேறு உண்டு, இந்த இயங்கியலில் ஒட்டுமொத்த ஆணிணமும் பெண்ணினத்திடம் தோற்றுபோய்விட்டார்கள் என்பதைதவிர வேறென்ன சொல்ல முடியும்? இந்த அரிய  செயல்பாட்டில்கூட தங்களை தாங்களே உயர்த்தி காட்டிக்கொள்ள வேண்டிய பெண்கள், ஏனோ தாழ்த்திக் கொள்கிறார்கள், ஏனெனில்! இந்த உலகிலுள்ள ஒட்டுமொத்த ஆணாதிக்க வெறியர்களும் கொஞ்சமாவது பெண்களை மதிக்கிறார்கள் என்றால் அது அவளது தாய்மையால்தான் என்று கூறத் தோன்றுகிறது, அப்படிப்பட்ட மரியாதை எங்களுக்குத் தேவையில்லை என்று மறுதளிக்கும் பெண்களில்கூட எத்தனை பேர் இதை உண்மையில்லை என்று மறுத்துவிட முடியும்? இயந்திரத்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் கூட அதற்கும் ஒர் ஆணின் உயிரணு அவசியம் தானே. 

அரைகுறை ஆடை அணிவதாலும், விரும்ய நேரத்தில், விரும்யோர்களுடன் சுதந்திரமாக சென்று வருவதாலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் விதிவிதமான புகைப்படங்களை போட்டுக்கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்துகொண்டு இருப்பதாலும், குடும்ப ஆண்களுடன் ஒத்துழையாமை வாழ்வு வாழ்வதாலும் ஆணாதிக்கத்தை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுவது வீணானது. முகநூல் பெண் புரட்சியாளர்கள் முகநூல் வட்டத்திற்குள்ளேயே தங்கள் பெண்ணிய விடுதலை முழக்கங்களை முழங்கிகொண்டு இருக்காமல், ஆண்ட்ராய்டு அலைபேசியிலேயே தங்கள் உரிமை போராட்டத்தை உருட்டிக்கொண்டு செல்லாமல், இந்த தேசம் திரும்பி பார்க்கும் அளவிற்கு தெருவில் இரங்கி போராட முனைய வேண்டும், காலம் காலமாய் தங்கள் மீது கட்டி எழுப்பபட்டுள்ள ஆணாதிக்க உளவியல் கூறுகளை கருத்தியல் ரீதியிலான சிந்தனைகளால் கருவறுக்க,  பெண்கள் அனைவரும் கரம்கோர்த்து களம்காண வேண்டும். 

முகநூலில் தங்கள் கருத்துக்களுக்கு ஓடி ஓடி வந்து பின்னூட்டம் போடுகிற ஆண்கள் அனைவரும் ஆணாதிக்கம் அற்றவர்கள் என்றும், தங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் ஆணாதிக்கம் உள்ளவர்கள் என்றும் அறிவாளித்தனமாக  நம்பிக்கொண்டு இருப்பவர்கள் ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும். இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வீட்டில் உள்ள  ஆண் குழந்தைகளை ஆணாதிக்கம் செய்ய கூடாது என்று சொல்லி சொல்லி வளத்திருந்தால் இந்நேரம் இங்கு ஆணாதிக்கம் ஓரளவிற்கேனும் ஒழிந்திருக்காதா? தங்களின் அரவணைப்பில் வளரும் குழந்தையை ஏன் இவர்களால் ஆணாதிக்கம் இல்லாத குழந்தையாக வளர்க்க முடியவில்லை என்ற கேள்விக்கு பெண்கள் கட்டும் சப்பைக்கட்டு எந்த அளவிற்கு ஏற்புடையதாக இருக்கும் என்று தெறியவில்லை, "ஒருத்தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம்" என்று கூறிய ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் ஹெர்பெர்ட்டின் கூற்றை பெண்கள் உற்றுநோக்க வேண்டும். அதுபோலவே "பெண்ணியம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் அல்ல, அது ஆணாதிக்கத்தை உயர்த்தி பிடிக்கும் இருவேறு கருத்தியலுக்கு எதிரான மோதல்" என்று இந்தியாவின் மூத்த பெண்ணியவாதிகளில் ஒருவரும், பெண்ணுரிமை அமைப்புகளின் முன்னோடியுமான அன்னை கமலா பாசின் கருத்தை பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் யாரும் எளிதில் கடந்துவிட முடியாது. பிள்ளையை வளர்க்கும் முழுபொறுப்பு தங்கள் கைகளில் இருக்கும்போதே எதையும் புரட்ட வேண்டும் என்று முயற்சிக்காதவர்கள், பிள்ளை வளர்ப்பிலும் இப்பொழுது ஆணாதிக்கம் ஊடுருவ பெண்களே காரணமாக இருக்கிறார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, இன்றைய சூழலில் பள்ளிகளில் இருந்தே பெண்ணிய வன்கொடுமைகளும், ஆணாதிக்க உளவியலும் ஒழிவதற்கு; பாடத்திட்டத்திலிருந்தே பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டப்பட  வேண்டும் என்று விரும்புகிறேன். 

ஆணாதிக்கம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் 20 வயதிற்கு மேல் 45 வயதுவரை மூர்க்கமாக இருப்பதற்கு வாய்பிருந்தாலும் அதன்பிறகு நரைப்பருவம் எய்தி கிழப்பருவம் எய்த எய்த அது படி படியாக குறையலாம், அதே காலகட்டங்களில் பெண்ணாதிக்கமும் தலைத்தூக்கி தாழத்தான் செய்யுமென்று நினைக்கிறேன். எது எப்படியோ ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதுதான் ஒரு சமூகம், ஒவ்வொரு சமூகத்தையும் ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதுதான் இந்த தேசம். குழந்தைகள் மூலம் குடும்பத்தையும், குடும்பத்தின் மூலம் சமூகத்தையும், சமூகத்தின் மூலம் தேசத்தையும், திருத்தும் முயற்சியை ஆண் பெண் இருபாலரும் இணைந்து மேற்கொண்டால் அது அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பின் ஆணாதிக்கம் குறைய வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் முறையான அன்பும், சரியான புரிதலும், விட்டு கொடுத்து வாழ்தலும் இருக்குமேயானால் எல்லாமே சாத்தியம்தான், மேலும் இது குடும்ப வாழ்விலிருந்து வெளியேறி போராடுவதை காட்டிலும் மேலானது என்றே தோன்றுகிறது. 

ஒவ்வொருப் பெண்ணும் தங்கள் மீது எப்படி ஆணாதிக்கம் உருவானது என்பதை சரியாக ஆராயத்தொடங்க வேண்டும், ஆண் பெண் வாழ்வியல் கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கும்போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட பிழையை திருத்த வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அதுபோலவே மனித வாழ்வின் முக்கிய வழிகாட்டியாக கருதப்படும், நம் முன்னோர்கள் எழுதிய இதிகாசங்கள், புராணங்கள் போன்றவைகள் ஆணாதிக்க செயலுக்கு அடித்தளமிட்டு இருப்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டிய அதே வேளையில், சாதி, மதம், கடவுள் போன்ற கூறுகளை கொண்டு கலந்து செய்யப்பட்ட நம் வாழ்வியல் கோட்பாட்டில், எங்கெங்கெல்லாம் பெண்ணடிமைக்கு வித்திடும் கருத்துக்கள் புரையோடி இருக்கின்றனவோ அவைகள் திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

பெண்களுக்கு எதிரி ஆண்கள் அல்ல, காலம் காலமாய் பழகிப்போன ஆணாதிக்க உளவியல்தான் பெண்களுக்கு எதிரி, எனவே... அழிக்க வேண்டியது புரையோடி கிடக்கும் ஆணாதிக்க உளவியலைத்தானே தவிர ஆண்களை அல்ல, இந்திரன் செய்த தவறுக்கு அகலிகை பெற்ற சாபம் பற்றியும், தாருகாவனத்தில் சிவன் செய்த சித்து விளையாட்டு பற்றியும் எத்தனை பெண்களுக்கு தெரியும்? அவர்கள் எழுதி வைத்துவிட்டு போன புராணத்தை  நான் படித்துச் சொன்னால், மதத்தை புண்படுத்திவிட்டான்,  கடவுளை இழிவு செய்கிறான் என்று கோபம் கொள்கிற பெண்களில், அங்கிருந்துதான் பெண்களின் மீதான தாழ்வு எண்ணம் தலைதூக்கி இருக்கிறது என்பதை எத்தனை பேர் புரிந்து இருக்கிறார்கள்? கட்டிய மனைவியின் கர்ப்பை சோதிக்க அவளை தீயில் இறக்கியதோடு மட்டுமல்லாமல், கர்ப்பத்தில் குழந்தையை சுமந்து கொண்டிருந்த அவளை, அடந்த காட்டில் கொண்டு விட்டவனை உத்தம புருஷன் என்று சொல்லும் பெண்களுக்கு, அவனைவிட தன் கணவன் எவ்வளவோ மேல் என்று ஏனோத்  தோன்றவில்லை, பழங்கால வரலாற்று நூல்களையும், சமயநெறி நூல்களையும், வேத நூல்களையும், இலக்கியங்களையும் முதலில் பெண்கள் வாசித்துப் பார்க்கட்டும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் பெண்களுக்கான நீதி என்னவென்று தெரிந்து கொள்ளட்டும், அப்பொழுதுதான் பெண்கள் ஏன் அடிமையானவர்கள், எப்படி அடிமையானவர்கள் என்பதை புரிந்துகொள்வதோடு, அவர்கள் யாரை எதிர்த்து போராட வேண்டும் என்பதையும் விளங்கிகொள்ள முடியும்.  நமது சமூக வாழ்வியல் கட்டமைப்பு எந்த அளவிற்கு உன்னதமானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உறுதிபாடு அற்றதாகவும் இருக்கிறது, பெண்ணடிமை என்பது அனைத்து மதங்களிலும், அனைத்து சாதிகளிலும் இருக்கின்ற ஒரு பொதுவான இழிவாக தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையின் உச்சம் என்பதை ஒருபோதும் மறுப்பதற்கில்லை. ஆழமாய் வேரூன்றி ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஆணாதிக்க உளவியலின் கிளைகளை மட்டும் வெட்டுவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. 

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதென்பது ஒரு இயற்கையான உணர்வுதானேயொழிய அதை யாரும் திட்டமிட்டு செயற்கையாக புகுத்தவில்லை என்பதை முதலில் பெண்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும், இயற்கைக்கு எதிரான எந்த செயலும் அழிவை மட்டுமே பரிசாக வழங்கும், இது காலம் நமக்கு உணர்த்தி கொண்டு இருக்கும் உண்மை, அந்த வகையில் பெண்களோ அல்லது ஆண்களோ முற்றிலும் தனித்து வாழ்வதென்பது உலக மனிதகுல அழிவின் உச்சமேயன்றி வேறில்லை. 

ஒவ்வொரு ஆணுக்குள்ளும்  உலவிகொண்டிருக்கும் அவனது ஆணாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டுமேத்தவிர, ஆண்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, பெண்கள் நாங்கள் தனித்தே வாழ்ந்து காட்டுகிறோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுகிறார்கள், அவர்களின் துணிச்சல் பாராட்டிற்குரியது என்றாலும்கூட, ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குடும்பத்தில் இருந்துகொண்டே, தங்கள் குடும்ப ஆண்களை ஆணாதிக்க பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. அதற்கான போராட்டம் மிக கடுமையானது என்றாலும்கூட அதன் வெற்றியால் கிடைக்கும் உளவியல் நீதி பல தலைமுறையை புனிதமாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


---- நிலாசூரியன் தச்சூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக