திங்கள், 20 மார்ச், 2023

உலக சிட்டுக் குருவிகள் தினம்


 இன்று மார்ச் 20 உலகச் சிட்டுக் குருவிகள் தினம், இந்த நாளில் சிட்டுக் குருவி இனம் அழியாமல் இருக்க, நாம் நம்மாலான முயற்சியினை மேற்கொள்வோம்.

 சாம்பல் நிற சிட்டு, கருஞ்சிட்டு, தேன்சிட்டு என்று சிட்டுக் குருவிகள் பலவகை இருப்பதாகக் கூறப்படுகிறது, இதில் தேன்சிட்டும் கருஞ்சிட்டும் அடர்ந்திருக்கும் வேலியோரங்கலில் கூடுகட்டி வாழும் தன்மையுடையவையாக இருக்கின்றன, ஆனால் சாம்பல் நிற சிட்டு மட்டுமே, மனிதர்கள் வாழும் வீடு, பள்ளிக்கூடம், கோயில் போன்ற இடங்களில் வாழ்வதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டிருக்ககூடும், 1987 லிருந்து 1991 வரையிலான காலங்களில், நான் பிறந்த ஊரான கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தச்சூர் கிராமத்தில், ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்தேன், அந்த காலகட்டங்களில், பள்ளிக்கூட கட்டிட சுவருக்கும் ஓட்டுக்கூரைக்கும் இடையிலான சிறு சிறு ஓட்டைகளிலும் சந்துகளிலும் சிட்டுக் குருவிகள் வாழ்வதை எனது நண்பர்களோடு நான் கண்டு மகிந்திருக்கிறேன்,  சாம்பல் நிற சிட்டுக்கள்,  சில முழு சாம்பல் நிறத்திலும், சில வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறத்திலும், சில தலையிலும் கழுத்திலும் கருப்பு நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும், சிறகு பகுதிகள் காக்கி கலந்த சாம்பல் நிறத்திலும் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், இந்த சிட்டுக் குருவிகளை தினமும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் கண்டு வந்ததனாலும், இவை பள்ளிக்கூடத்தையே தங்கள் இருப்பிடமாக கொண்டதனாலும்,   இந்த சாம்பல் நிற சிட்டுக்களுக்கு நாங்கள் "பள்ளிக்கூடத்துக் குருவி" என்று பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினோம், எங்கள் ஊரில் அப்பொழுதெல்லாம் எல்லோருமே பள்ளிக்கூடத்துக் குருவி என்றுதான் சொல்வார்கள், இன்றும்கூட பலர் அப்படித்தான் சொல்கிறார்கள்.

தற்பொழுது சிட்டுக் குருவிகள் இனம் அழிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது, முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் விரவி இருந்த சிட்டுக் குருவிகளை இப்பொழுதெல்லாம் எங்கோ சில இடங்களில் மட்டுமே காண முடிகிறது, எனவேதான் அவை அழிந்து வருவதாகச் சொல்லப்படுவது உண்மையாகத்தான் இருக்குமோ என்று நம்பத் தோன்றுகிறது. 

இன்று நான் வாழும் வாடகை வீட்டில், சொந்தவீடுகட்டி வாழும் சிட்டுக் குருவிகளிடம்  நான் அன்பாகப் பழகுகிறேன், மனிதர்களால் சொல்லிக் கொடுக்கமுடியாத வாழ்வியல் பாடத்தை அவைகள் எனக்கு சொல்லிக் கொடுக்கின்றன.

நான் ஒளிப்பதிவு செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கிய எங்கள் வாடகை வீட்டில் வாழும் சிட்டுக் குருவிகளுக்கு நன்றி சொல்லக் கடமைப்படுகிறேன்.

----- நிலாசூரியன் தச்சூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக