வெள்ளி, 12 ஏப்ரல், 2024

TNCSC கணினிப் பணியாளர்களின் வாழ்நிலை பற்றிய நூல் எழுதும் முயற்சி

 


RTI மூலம் கேட்கப்பட்ட 36 கேள்விகளுக்கும் முறையான பதில் அளிக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் சொதப்பலான பதிலை அளித்து நீதிக்கு புறம்பாய் நடந்துகொண்ட  TNCSC தலைமை அலுவலக பொதுத்தகவல் அலுவலருக்கு சரியான பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. 30 நாட்களுக்குள் வழங்கவேண்டிய தகவல்களை மேல் முறையீடு செய்த பிறகும்கூட காலம் கடத்தி வழங்கியதும் அதற்கு ஆதாரமே வழங்காமல் முதலில் அனுப்பப்பட்ட தகவல் முகவரி தவறென்று திரும்ப வந்து விட்டதாகவும் சப்பகட்டு கட்டப்பட்ட பொதுதகவல் அலுவலரின் கூற்று ஏற்புடையதாக இல்லை. TNCSC பொதுதகவல் அலுவலரின் செயல்பாடுகள் நான் மேல்முறையீட்டுக்கு போகக்கூடாது தகவல் ஆணையத்திற்கு போகமுடியாமல் தினற வேண்டும் என்பதற்காகவே காலம் கடத்தப்பட்தாக என்னால் விளங்கிக்கொள்ள முடிகிற  அதே வேளையில் கணினிப் பணியாளர்களை கசக்கி புழிந்து மிரட்டி உருட்டி ஏமாற்றி வேலை வாங்கிக் கொள்கிற மோசமான மற்றும் கீழ்த்தரமான சிந்தனை கொண்ட அதிகாரிகள் இருக்கும் இந்த கார்ப்பரேட் நிறுவனத்திடமே 15 பக்கங்கள் தட்டச்சு (டைப்பிங்) செய்ய வைத்து அவர்களிடமே நான் வேலை வாங்கி இருக்கிறேன் என்றால் சட்டம் நமக்கு துணை இருக்கிறது என்றுதானே அர்த்தம். அந்த சட்டத்தை வைத்தே இன்னும் பல தகவல்களை RTI மூலம் மீண்டும் மீண்டும்  பொதுதகவல் அலுவலரிடம் இருந்து கறந்து,  நான் எழுத இருக்கும் "கணினிப் பணியாளர்களின் கண்ணீர் கதை" என்ற நூலுக்கு தேவையான விடயங்களை சேகரித்துக்கொள்ள என்னால் முடியும். 15 ஆண்டுகளாக எந்தவித சலுகைகளும் இல்லாமல் கொடிய ஒப்பந்தத்தின் மூலம் கொத்தடிமைகளைப்போல் வேலை செய்துகொண்டு இருக்கும் கணினிப் பணியாளர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை வெளியுலகம் அறிந்துகொள்ளும் ஆவணமாக எனது நூல் இருப்பதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் யாரும் பாதிக்கப்படாமல் கணினிப் பணியாளர்களுக்கு கடுகளவேனும் நன்மை நடக்குமெனில் அதுவே என் எழுத்துக்கு கிடைக்கும் மகுடமாகும். இந்த நாட்டில் கணினிப் பணியாளர்கள் இப்படியெல்லாம் துயரப்பட்டு வாழ்ந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது, எழுத்துக்கள்தான் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் மிகப் பெரியச் சான்று. 


ஒரு பொருப்புள்ள சமூக ஊடக எழுத்தாளனாக நான் கண்ணால் பார்த்த காதால் கேட்ட மேலும் பல்வேறு மாவட்ட எழுத்தாளர்கள்  மற்றும் தோழர்களிடம்  விசாரித்து அறிந்துகொண்ட செய்திகளை ஒன்று திரட்டி நூலாக்க முயன்று வருகிறேன். எனது நூலுக்கு தேவையான  செய்திகள் உள்ளவர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும் தாங்கள் அனுபவிக்கும் நன்மை தீமைகளையும் jnsamythamil@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளலாம், தங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும். 

 ஊதிய உயர்வும் பணி நிரந்தரமுமே  கணினிப் பணியாளர்களின் கண்ணீரைத் துடைக்க நிரந்தர வழி என்பதை வலியுறுத்தி தொடர்ந்து பல கருத்துக்களை சமூக ஊடகங்களில்  நான் பதிவிட்டு வருகிறேன் அந்த வகையில் கணினிப் பணியாளர்களின் பணி நிரந்திரத்திற்காக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு அமைச்சர் அவர்களுக்கும் பொதுமேலாளர் அவர்களுக்கும் என்னால் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. இது அடுத்தகட்ட நகர்வாகும். 


---- நிலாசூரியன் தச்சூர். 
சமூக ஊடக முற்போக்கு எழுத்தாளர்
கடலூர் மாவட்டம் மேற்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக